பிரம்மபுத்ரா நதியின் மீது ரூ.5,960 கோடி செலவில் கட்டப்பட்ட நாட்டிலேயே மிக நீளமான ரெயில்-சாலை பாலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்


பிரம்மபுத்ரா நதியின் மீது ரூ.5,960 கோடி செலவில் கட்டப்பட்ட நாட்டிலேயே மிக நீளமான ரெயில்-சாலை பாலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 26 Dec 2018 12:00 AM GMT (Updated: 25 Dec 2018 10:49 PM GMT)

ரூ.5,960 கோடி செலவில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட நாட்டிலேயே மிக நீளமான ரெயில்–சாலை பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் திப்ருகர்–தேமாஜி இடையே போகிபீல் என்ற இடத்தில் பிரம்மபுத்ரா நதியின் மீது நாட்டிலேயே மிக நீளமான ஈரடுக்கு பாலம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது.

‘போகிபீல்’ பாலம் எனப்படும் இந்த பாலத்தை கட்டுவதற்கு கடந்த 1997–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதி அப்போதைய பிரதமர் தேவேகவுடா அடிக்கல் நாட்டி வைத்தார்.

2002–ம் ஆண்டு ஏப்ரல் 21–ந் தேதி, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பணிகளை தொடங்கி வைத்தார். வடகிழக்கு எல்லைப்புற ரெயில்வே இப்பணியை செய்தது. 2007–ம் ஆண்டு, இதை தேசிய திட்டமாக மத்திய அரசு அறிவித்தது. நரேந்திர மோடி அரசு, பணிகளை வேகமாக முடுக்கி விட்டது.

தொடக்கத்தில் திட்ட செலவு ரூ.3 ஆயிரத்து 230 கோடியாக இருந்தது. ஆனால், ரூ.5 ஆயிரத்து 960 கோடியாக செலவுத்தொகை உயர்ந்தது.

21 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டி முடிக்கப்பட்ட இந்த ‘போகிபீல்’ பாலத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், அசாம் மாநில கவர்னர் ஜகதீஷ் முகி, முதல்–மந்திரி சர்பானந்த சோனோவால், அருணாசலபிரதேச முதல்–மந்திரி பெமா காண்டு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாலத்தை திறந்து வைத்த பிறகு, பிரதமர் சிறிது தூரம் பாலத்தில் நடந்து சென்றார். அப்போது, அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்தார். திறந்த ஜீப்பில் பாலத்தின் மறுமுனையான தேமாஜி வரை சென்றார். ரெயில் பாலத்தில் முதலாவது பயணிகள் ரெயில் போக்குவரத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர், தேமாஜியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது:–

இது வெறும் பாலம் மட்டும் அல்ல, லட்சக்கணக்கான மக்களை இணைக்கும் வாழ்வாதாரம். இப்பாலத்தால் மக்களுக்கு சிறந்த சுகாதாரம், கல்வி, வர்த்தக வாய்ப்பு கிடைத்து, அவர்களின் வாழ்க்கை எளிதாகும். மேலும், ராணுவ தேவை அடிப்படையிலும், இப்பாலம் முக்கியமானது. நமது என்ஜினீயரிங் திறனுக்கு இது நல்ல சான்று.

நிர்வாகத்தில் திறன் நுழையும்போது, ஊழல் ஒழிக்கப்படுகிறது, மக்களின் வாழ்க்கை எளிதாகிறது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பால கட்டுமான பணிகள் தொடங்கினாலும், அதன் பின்னர் வந்த அரசு, இதில் கவனம் செலுத்தவில்லை. வாஜ்பாய், தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால், 2008–ம் ஆண்டே பாலம் முடிவடைந்து இருக்கும்.

வாஜ்பாய் ஆட்சியில்தான் புதிய இந்தியாவுக்கான விதை போடப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் அதை கவனிக்கவில்லை.

இந்த அரசு பதவி ஏற்றபோது, ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் முடிவடையாமல் இருந்தன. அவை தற்போது முடிக்கப்பட்டோ, முடிவடையும் நிலையிலோ உள்ளன. உள்கட்டமைப்புக்கு ஊக்கம் அளித்தால் புதிய இந்தியா பிறக்கும். ஆகவே, இன்னும் 2 ஆண்டுகளில் புதிய இந்தியா உதயமாகும்.

இவ்வாறு மோடி பேசினார்.


மேலே 3 வழிச்சாலை; கீழே இரட்டை ரெயில் பாதை

‘போகிபீல் பாலம்’ என்று அழைக்கப்படும் இந்த பாலம், நாட்டிலேயே மிக நீளமான ரெயில்–சாலை பாலம் மட்டுமின்றி, பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட 4–வது ரெயில்–சாலை பாலம் ஆகும்.

பாலத்தின் நீளம் 4.94 கி.மீ. ஆகும். பாலத்தை தாங்கும்வகையில் 42 உறுதியான தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கீழ்பாலத்தில், ரெயில் போக்குவரத்துக்காக இரட்டை அகல ரெயில் பாதை போடப்பட்டுள்ளது. மேல்பாலத்தில், சாலை போக்குவரத்துக்காக 3 வழிச்சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையால், திப்ருகருக்கும், அருணாசலபிரதேச தலைநகர் இடாநகருக்கும் இடையிலான சாலை வழி தூரம் 150 கி.மீ. குறையும். அதே சமயத்தில், ரெயில் வழி தூரம் 705 கி.மீ. குறையும். பயண நேரம் 10 மணி நேரம் குறையும்.

திப்ருகரில்தான் பெரிய ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகள், விமான நிலையம் ஆகியவை அமைந்துள்ளதால், அங்கு செல்ல தேமாஜி நகர மக்களுக்கு இப்பாலம் உதவியாக இருக்கும்.

இந்தியா–சீனா எல்லையில் 75 சதவீத பகுதி, அருணாசலபிரதேசத்தில்தான் உள்ளது. அருணாசலபிரதேசம் அருகே இப்பாலம் அமைந்திருப்பதால், அங்கு எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு போர் தளவாடங்கள் கொண்டு செல்ல இப்பாலம் பெரிதும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

ராணுவ வீரர்களை விரைவாக கொண்டு வருவதற்கும் பயன்படும். அவசர காலத்தில், இந்த சாலையில் போர் விமானம் கூட தரை இறங்க முடியும். ஆகவே, இப்பாலம் தேச பாதுகாப்புக்கு பெரிதும் துணைபுரியும் என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story