ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Feb 2019 6:45 AM GMT (Updated: 8 Feb 2019 6:45 AM GMT)

ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி கூறுகையில், “ ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரான்சிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது. ரபேல் மோசடியில் பிரதமர் மோடி தவறு செய்துள்ளார். மோசடி நடைபெற்றுள்ளது தெளிவாக தெரிகிறது.

பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பொய்களை கூறுகிறார். பிரதமர் மோடியினாலே, அனில் அம்பானியை தான் தேர்வு செய்ததாக பிரான்சு முன்னாள் அதிபர் ஒப்புக்கொண்டுள்ளார். மனோகர் பாரிக்கரை நான் சந்திக்கும் போது ரபேல் குறித்து எதுவும் பேசவில்லை. உடல் நலன் குறித்து விசாரிக்க மட்டுமே அவரை சந்தித்தேன்.

பிரதமர் மோடி ரூ.30,000 கோடியை விமானப்படையிடம் இருந்து  கொள்ளையடித்து அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளார். இதைத் தான் நாங்கள் கடந்த ஓராண்டாக எழுப்பி வருகிறோம். தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் அளித்த அறிக்கையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகையில், பிரதமர் மோடி தனியாக பேசி உள்ளார் என கூறப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவல்களை அளித்துள்ளது” என்றார்.

Next Story