டெல்லி தீ விபத்து; தேடப்பட்ட ஓட்டல் உரிமையாளர் கைது


டெல்லி தீ விபத்து; தேடப்பட்ட ஓட்டல் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2019 6:43 AM GMT (Updated: 17 Feb 2019 6:43 AM GMT)

டெல்லியில் இரு தமிழர்கள் உள்பட 17 பேர் பலியான தீ விபத்தில் ஓட்டலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி கரோல்பாக் பகுதியில் ஆர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது.  4 மாடிகளை கொண்ட இந்த ஓட்டலில்  40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.  60க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அதிகாலை 4.30 மணியளவில் திடீரென  ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, தீயணைப்பு படை மற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் குழந்தை உட்பட 17 பேர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்த பலர்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.  அவர்கள் கோவையை சேர்ந்த அரவிந்த சிவகுமாரன் மற்றும் நந்தகுமார் என தெரிய வந்துள்ளது.

ஓட்டலின் உரிமையாளராக ராகேஷ் கோயல் இருந்து வருகிறார்.  அவருக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  அவர் கத்தார் நாட்டில் இருந்து விமானத்தில் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகிறார் என டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.  அவர் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.  அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இதனையடுத்து அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.

Next Story