எல்லையில் தொடரும் பதற்றம்; இந்திய மணமகன், பாகிஸ்தானிய மணமகள் இடையேயான திருமணம் ரத்து
எல்லையில் தொடரும் பதற்ற நிலையால் இந்திய மணமகனுக்கும் பாகிஸ்தானிய மணமகளுக்கும் இடையே நடக்க இருந்த திருமணம் நின்று போனது.
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் பலியாகினர்.
இதனை தொடர்ந்து கடந்த 26ந்தேதி, பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது. இதில் தீவிரவாதிகள், தீவிரவாத பயிற்சி பெறுவோர், தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து கடந்த 27ந்தேதி காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்து, தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தன. தொடர்ந்து எல்லையில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இதனால் இந்திய மணமகன் மற்றும் பாகிஸ்தானிய மணமகள் இடையே நடக்க இருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தின் கேஜத் கா பார் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மகேந்திர சிங். இவருக்கும் பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் அமர்கோட் மாவட்டத்தில் சினோய் கிராமத்தில் வசித்து வரும் சகன் கன்வார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதற்காக அழைப்பிதழ்களை சிங் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கி உள்ளார். பாகிஸ்தானுக்கான விசாக்களை வாங்க அவர் நிறைய நெருக்கடிகளை சந்தித்துள்ளார்.
இதன்பின் 5 பேருக்கான விசாக்களை வாங்கியுள்ளார். அனைத்துவித முன்னேற்பாடுகளையும் அவர் செய்துள்ளார். தார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவும் செய்துள்ளார். இந்த ரெயில் பாகிஸ்தானின் லாஹூர் நகரில் இருந்து இந்தியாவின் அட்டாரி நகருக்கு திங்கட்கிழமை மற்றும் வியாழ கிழமை ஆகிய நாட்களில் இயக்கப்படும்.
இந்நிலையில், எல்லையில் பதற்றம் நிறைந்த சூழலில் பாகிஸ்தானிய அதிகாரிகள் இந்தியாவுக்கு செல்லும் தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தற்காலிக ரத்து செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த திருமணம் நின்று போனது.
Related Tags :
Next Story