சமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓட்டம் - கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்


சமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓட்டம் - கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 15 April 2019 9:45 PM GMT (Updated: 15 April 2019 8:38 PM GMT)

சமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாக கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள்தான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், 36 தொழிலதிபர்கள் சமீப காலங்களில் தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைதான ஆயுத தளவாட தரகர் சூசன் மோகன் குப்தா என்பவரின் ஜாமீன் மனு மீது டெல்லி தனிக்கோர்ட்டில் நேற்று நடந்த விவாதத்தின்போது, இத்தகவலை தெரிவித்தது.

துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட ராஜீவ் சக்சேனா அளித்த தகவலின் பேரில், இந்த ஊழலில் சூசன் மோகன் குப்தாவின் தொடர்பு தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவரது ஜாமீன் மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குப்தாவின் வக்கீல், குப்தா சமூகத்துடன் ஆழமாக பின்னி பிணைந்தவர் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்குமாறு வலியுறுத்தினார்.

அந்த வாதத்தை அமலாக்கத்துறையின் அரசு சிறப்பு வக்கீல்கள் டி.பி.சிங், என்.கே.மட்டா ஆகியோர் நிராகரித்தனர். அவர்கள் கூறியதாவது:-

விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, ஸ்டெர்லிங் நிறுவனத்தின் சந்தேசரா சகோதரர்கள் ஆகியோரும் சமூகத்துடன் பின்னி பிணைந்தவர்கள்தான். இருப்பினும், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். சமீப காலங்களில், இதுபோன்று 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளனர். இவரும் தப்ப வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story