பாடகர், நடிகர், கிரிக்கெட் வீரர் என நாடாளுமன்றத்தில் 300-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள்


பாடகர், நடிகர், கிரிக்கெட் வீரர் என நாடாளுமன்றத்தில் 300-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள்
x
தினத்தந்தி 26 May 2019 9:44 PM GMT (Updated: 26 May 2019 9:44 PM GMT)

ஒவ்வொரு தேர்தலிலும் ஏராளமான புதுமுகங்களை நாடாளுமன்றம் பெற்று வருகிறது.

புதுடெல்லி,

அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் பல்வேறு துறைகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல உள்ளனர்.

இவர்களில் மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவரும், பெண் சாமியாருமான பிரக்யா தாகூர், சூபி பாடகர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நடிகர் சன்னி தியோல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இவர்களை தவிர, பா.ஜனதாவின் மகத்தான வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த கட்சியின் தலைவர் அமித்ஷா மக்களவைக்கு புதுமுகம் ஆவார். இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வந்த இவர், இனிமேல் மக்களவையில் பா.ஜனதாவுக்கு பெரும் பலமாக திகழ்வார் என கருதப்படுகிறது.

இதைப்போல மத்திய மந்திரியாக இருந்த ஸ்மிரிதி இரானி முதல் முறையாக மக்களவையில் அடியெடுத்து வைக்கிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தியையே வீழ்த்திய அவருக்கு கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இவரைப்போல மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மந்திரி பதவியை வகித்து வந்த ரவிசங்கர் பிரசாத்தும் மக்களவைக்கு முதல் முறை உறுப்பினர் ஆகிறார்.

இத்தகைய புதுமுகங்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஏராளமான மூத்த தலைவர்களை இந்த நாடாளுமன்றம் இழந்து இருக்கிறது. அந்தவகையில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் மீண்டும் போட்டியிடாதது பா.ஜனதாவுக்கு மிகப்பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

மேலும் முந்தைய மக்களவையில் காங்கிரஸ் கட்சித்தலைவராக பொறுப்பு வகித்த மல்லிகார்ஜூன கார்கே, ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர்களையும் நாடாளுமன்றம் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story