புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; பிரதமரிடம் முதல் அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; பிரதமரிடம் முதல் அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jun 2019 7:12 AM GMT (Updated: 23 Jun 2019 7:12 AM GMT)

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது பற்றி பிரதமர் மோடியிடம் முதல் அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி,

தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க. தலைமையிலான
முதல் ஆட்சி காலத்தில், மத்திய திட்ட குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.  2015ம் ஆண்டு, ஜனவரி 1ந்தேதி செயல்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் உள்ளனர்.

நிதி ஆயோக் ஆட்சி குழுவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்- மந்திரிகளும், அந்தமான் துணை நிலை கவர்னரும் இடம் பெற்றுள்ளனர்.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், முதல் முறையாக நிதி ஆயோக்கின் ஆட்சிக்குழு கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 15ந்தேதி நடந்தது.

இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.  இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, புதுடெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டவரைவை கொண்டு வர வேண்டுமென பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.

புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை.  மாநிலத்தில் வறட்சி நிலவி வருகிறது.  இதனால் பொதுமக்கள் நீரை சேமிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

Next Story