நம்பிக்கை வாக்கெடுப்பு: கர்நாடக சட்டமன்றத்தை சுற்றிலும் 2 கி.மீ. தூரத்திற்கு 144 தடை உத்தரவு


நம்பிக்கை வாக்கெடுப்பு: கர்நாடக சட்டமன்றத்தை சுற்றிலும் 2 கி.மீ. தூரத்திற்கு 144 தடை உத்தரவு
x
தினத்தந்தி 27 July 2019 1:51 PM GMT (Updated: 27 July 2019 1:51 PM GMT)

கர்நாடகா சட்டமன்றத்தை சுற்றிலும் 2 கி.மீ. தூரத்திற்கு 144 தடை உத்தரவு உத்தரவு பிறப்பித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் ஆலோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால், முதல்-மந்திரி குமாரசாமி கடந்த 23-ந் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் அவர் தோல்வி அடைந்ததால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து, மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து சபாநாயகர் முடிவு எடுக்காததால், ஆட்சி அமைக்க அவசரப்பட வேண்டாம் என்று கர்நாடக தலைவர்களுக்கு பாரதீய ஜனதா மேலிடம் அறிவுறுத்தியது. இதனால் எடியூரப்பா ஏமாற்றம் அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, சங்கர் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடியாக உத்தரவிட்டார். இந்த நிலையில், பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க அக்கட்சி மேலிடம் நேற்று அனுமதி வழங்கியது.

கட்சி மேலிடத்தின் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, எடியூரப்பா, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.  ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, நேற்று மாலை  6.30 மணிக்கு எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

எடியூரப்பா வரும் திங்கள் கிழமை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.  இப்போதுள்ளநிலையில் அவையில் 209 உறுப்பினர்கள் உள்ளனர். அவையில் 105 உறுப்பினர்கள் இருந்தாலே அதுபெரும்பான்மைதான். எடியூரப்பாவுக்கு ஆதரவாக 105 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 63 எம்எல்ஏக்கள் ஆதரவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 34 எம்எல்ஏக்கள் ஆதரவும் இருக்கிறது. 

இந்நிலையில்  4வது முறையாக முதல்-மந்திரியாக  பதவியேற்ற எடியூரப்பா  ஜூலை (29-ம் தேதி)  திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில்,  இதனைக் கருத்தில் கொண்டு ஜூலை 29ம் தேதி காலை 6 மணி முதல் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை விதான் சவுதாவை சுற்றியுள்ள 2 கி.மீ பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் ஆலோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.  தடை உத்தரவின் போது அப்பகுதியில் போராட்டம், ஊர்வலம், தர்ணா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story