நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை: தொழில் அதிபர் சித்தார்த் உடல் மீட்பு - சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது


நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை: தொழில் அதிபர் சித்தார்த் உடல் மீட்பு - சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 31 July 2019 10:00 PM GMT (Updated: 31 July 2019 8:55 PM GMT)

நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தொழில் அதிபர் சித்தார்த் உடல் 36 மணி நேர தேடலுக்கு பிறகு நேற்று மீட்கப்பட்டது.

மங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்(வயது 59). சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் ‘காபி டே’ எனும் பிரபலமான ஓட்டல்களும், தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்களும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி காரில் தனது டிரைவர் பசவராஜுடன், சித்தார்த் மங்களூருவுக்கு சென்றார். மங்களூரு அருகே ஓடும் நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் சென்றபோது காரை நிறுத்தி இறங்கி சென்ற சித்தார்த் அதன்பின்னர் திரும்பி வரவில்லை.

சித்தார்த் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. மேலும் நேத்ராவதி ஆற்றில் ஒருவர் குதித்ததை நான் பார்த்தேன் என்று மீனவர் ஒருவரும் கூறினார்.

இந்த நிலையில் சித்தார்த்தின் உடலை தேடும் பணி முழுவீச்சில் நடந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் மங்களூரு அருகே ஒய்கை பஜார் பகுதியில் ஓடும் நேத்ராவதி ஆற்றில் சித்தார்த் பிணமாக கரை ஒதுங்கினார். இதனை பார்த்த மீனவர்கள் கங்கனாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு போலீசார் மீட்பு குழுவினருடன் விரைந்து சென்று சித்தார்த்தின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதாவது 36 மணி நேர தேடலுக்கு பிறகு சித்தார்த் பிணமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தொழில் அதிபர் சித்தார்த் நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதற்கிடையே சித்தார்த்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காலை 10.45 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சித்தார்த்தின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அவரது சொந்த ஊரான சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சீக்கேனஹள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உடல், சித்தார்த்துக்கு சொந்தமான சேதனஹள்ளி காபி எஸ்டேட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது.

பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவருடைய உடலுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சித்தார்த்தின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


Next Story