சுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி வழக்கு தினசரி விசாரணை தொடங்கியது


சுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி வழக்கு தினசரி விசாரணை தொடங்கியது
x
தினத்தந்தி 7 Aug 2019 3:21 AM IST (Updated: 7 Aug 2019 3:21 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி வழக்கின் தினசரி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தொடங்கியது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி மற்றும் ராம ஜென்மபூமி அமைந்திருந்த இடம் என கூறப்படுகிற 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் ஸ்ரீரவிசங்கர், வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. அந்த குழு சார்பில் அளித்த அறிக்கையில் சமரச பேச்சு தோல்வியில் முடிந்து விட்டதாக அறிவித்தனர். இதையடுத்து நேற்று (6-ந் தேதி) முதல் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு தொடங்கியது.

விசாரணை தொடங்கியதும், இந்த வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வது அல்லது ஒலிப்பதிவு செய்வது, இல்லையென்றால் விசாரணையின்போது ராமபக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் கோவிந்தாச்சார்யா முன்வைத்த கோரிக்கைகளை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இதையடுத்து நிர்மோகி அகாடா தரப்பில் மூத்த வக்கீல் சுசீல்குமார் ஜெயின் ஆஜராகி வாதாடினார். அப்போது, கடந்த 100 ஆண்டுகளாக இந்த இடத்தின் உள்முற்றம் நிர்மோகி அகாடாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ராம ஜென்மஸ்தானம் என்று கூறப்படும் இடமும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. 1934-ம் ஆண்டில் இருந்து இந்த இடத்தில் முஸ்லிம்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

1951-ல் இந்த இடத்தை இணைக்கும் வகையில் பிறப்பித்த உத்தரவில் உள்முற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சீதையின் சமையலறை, பீடம் மற்றும் பண்டக சாலை ஆகியவை அடங்கிய வெளிமுற்றமும் (சீதா ரசோயி) எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிமுற்றம் பற்றி எந்த சர்ச்சையும் இல்லை. எனவே ராமஜென்ம ஸ்தானத்தின் உள்முற்றம் பற்றி மட்டுமே எங்கள் மனுவில் குறிப்பிட்டு உள்ளோம்.

நிர்மாகி அகாடா அயோத்தியில் பல கோவில்களை பராமரித்து வருகிறது. சட்டரீதியாக எங்களுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆனால் கோவிலை பராமரிப்பது தொடர்பான உரிமை எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உங்கள் வசம் உள்ளதா? அல்லது அந்த இடத்தின் உரிமை உங்களிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுசீல்குமார் ஜெயின், அதன் உரிமை எங்களிடம் உள்ளது என்றும், தொடர்ந்து வழிபாடு மற்றும் நமாஸ் நடைபெறாத இடங்களை மசூதி என்று கருத முடியாது என்பது தொடர்பான சில தீர்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதைத்தொடர்ந்து நாளையும் (அதாவது இன்று) விசாரணை தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story