பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர சக்ரா விருது


பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர சக்ரா விருது
x
தினத்தந்தி 14 Aug 2019 6:13 AM GMT (Updated: 14 Aug 2019 9:00 PM GMT)

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு வீர சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி சென்று, அங்குள்ள பயங்கரவாத முகாம்களை குண்டு போட்டு அழித்தன.

ஆனால் அடுத்த நாளே பாகிஸ்தான், தனது அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது. இந்திய விமானப்படை சுதாரித்துக்கொண்டு, அந்த விமானங்களை விரட்டியடித்தது. அப்போது பாகிஸ்தானின் ‘எப்-16’ போர் விமானம் ஒன்றை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.

ஆனாலும் அவர் பாகிஸ்தான் பிடியில் சிக்கினார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் மார்ச் 1-ந் தேதி இரவு அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, நாடு திரும்பினார்.

அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர், அவரது தந்தையும், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியுமான சிம்மகுட்டி வர்த்தமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் சென்னையில்தான் வசித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி, அவர்களின் பிடியில் சிக்கியபோதும், நிலை குலையாமல் வீரத்துடன் போராடி நின்ற அபிநந்தன் ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

அவரது வீர தீரச்செயலுக்காக இந்தியாவின் மூன்றாவது உயரிய போர்க்கால விருதான வீர சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 2-வது உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருது மரணத்துக்கு பிந்தைய நிலையில், ராஷ்ட்ரிய ரைபிள் படை பிரிவை சேர்ந்த சப்பர் பிரகாஷ் ஜாதவுக்கு வழங்கப்படுகிறது.

பிப்ரவரி 27-ந் தேதி பாகிஸ்தான் போர் விமானங்களை வீரத்துடன் துரத்தியடித்த படைத்தலைவர் மின்டி அகர்வால் என்ற வீராங்கனைக்கு ‘யூத் சேவா’ பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி படையினரின் வீர தீரச்செயல்களுக்கான விருதை ராணுவ அமைச்சகம் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story