வீர தீர செயலுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு 75 பதக்கங்கள்


வீர தீர செயலுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு 75 பதக்கங்கள்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:30 PM GMT (Updated: 14 Aug 2019 8:21 PM GMT)

வீர தீர செயலுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு அதிக அளவாக 75 பதக்கங் களை ஜனாதிபதி அறிவித்துள்ளார். 111 ராணுவ வீரர்கள் மற்றும் 946 போலீசாருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

புதுடெல்லி,

சுதந்திர தினத்தையொட்டி, முப்படை வீரர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசாரின் வீர தீர செயல்களை பாராட்டும்வகையில் பதக்கங்களும், விருதுகளும் அறிவிக்கப்படுவது வழக்கம்.

அதுபோல், இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று இந்த பதக்கங்களை அறிவித்தார்.

வீர தீர செயலுக்காக வழங்கப்படும் பதக்கங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) அதிகமான பதக்கங்களை பெறுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், சில மாநிலங்களில் நக்சலைட்டுகளுக்கு எதிராகவும் போராடியதற்காக அதிக பதக்கங்கள் கிடைத்துள்ளது.

ரிசர்வ் போலீஸ் படையில் இரண்டாம் நிலை அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ள ஹர்ஷ்பால் சிங்குக்கு 2-வது உயரிய வீர தீர விருதான ‘கீர்த்தி சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது குழுவில் இடம்பெற்றுள்ள ஜாகீர் உசேனுக்கு சவுர்யா சக்ரா விருது கிடைத்துள்ளது.

இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜம்முவில் 3 பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டனர். துப்பாக்கி குண்டுகளையும், கையெறி குண்டு சிதறல்களையும் தாங்கிக்கொண்டு, அவர்கள் 3 பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர். அவர்களின் துணிச்சலான செயலை பாராட்டி, இவ்விருது அளிக்கப்படுகிறது.

ராணுவத்தில் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த சப்பர் ஜாதவ் என்ற வீரருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக ‘கீர்த்தி சக்ரா’ வழங்கப்படுகிறது. அவர் கடந்த ஆண்டு புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் போரிட்டபோது வீரமரணம் அடைந்தார். கர்நாடக மாநிலம் நிபானி தாலிகாவை சேர்ந்தவர்.

ராணுவ வீரர் அவுரங்கசீப், மேஜர் ஆதித்ய குமார் ஆகியோருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக ‘சவுர்ய சக்ரா’ வழங்கப்படுகிறது. வீர தீர செயலுக்காக, மொத்தம் 111 ராணுவ வீரர்கள் விருது பெறுகிறார்கள்.

ரிசர்வ் போலீஸ் படை வீரர் தியானேஸ்வர் ஸ்ரீராம், சவுர்ய சக்ரா விருது பெறுகிறார். காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சோதனைச்சாவடி பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் 2 பயங்கரவாதிகளை துணிந்து எதிர்கொண்டு சுட்டு வீழ்த்தினார்.

துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டதற்காக, 3 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் வழங்கப்படுகிறது. 177 போலீசாருக்கு போலீஸ் பதக்கம் அளிக்கப்படுகிறது.

சிறப்பான பணிக்காக 89 போலீசாருக்கு போலீஸ் பதக்கமும், பாராட்டத்தக்க பணிக்காக 677 போலீசாருக்கு போலீஸ் பதக்கமும் வழங்கப்படுகிறது. காஷ்மீர் மாநில போலீசார் 61 பதக்கங்கள் பெறுகிறார்கள்.

வீர தீர செயலுக்காக வழங்கப்படும் மொத்தம் 180 பதக்கங்களில், காஷ்மீர் மாநிலத்தில் துணிச்சலான செயலில் ஈடுபட்ட 114 பேருக்கும், நக்சலைட் ஆதிக்க மாநிலங்களில் போராடிய 62 பேருக்கும், வடகிழக்கு மாநிலங்களில் வீர தீர காரியங்களில் ஈடுபட்ட 4 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.


Next Story