பஞ்சாபில் கனமழை: 8 பேர் பலி, பயிர்கள் நாசம்


பஞ்சாபில் கனமழை: 8 பேர் பலி, பயிர்கள் நாசம்
x
தினத்தந்தி 28 Aug 2019 2:55 PM GMT (Updated: 28 Aug 2019 2:55 PM GMT)

பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 8 பேர் பலியாகியுள்ளனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனையடுத்து பக்ரா அணையில் இருந்து சட்லெஜ் நதி மற்றும் அதன் துணை நதிகளில் அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டதால் பஞ்சாபின் பல கிராமப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, பெரும் சேதம் ஏற்பட்டது.

கனமழை காரணமாக லூதியானாவில் 5 பேரும், ஃபாசில்கா, ரூப்நகர் மற்றும் ஜலந்தர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். சுமார் 550 கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 1.72 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 

இது குறித்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநிலத்தின் உள்கட்டமைப்புக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 2,000 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடம் வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1,000 கோடி கோரப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story