இந்திய செயற்கைக்கோள்களை விண்வெளி குப்பைகளிலிருந்து பாதுகாக்க இஸ்ரோ புதிய திட்டம்


இந்திய செயற்கைக்கோள்களை விண்வெளி குப்பைகளிலிருந்து பாதுகாக்க இஸ்ரோ புதிய திட்டம்
x
தினத்தந்தி 24 Sep 2019 12:14 PM GMT (Updated: 24 Sep 2019 12:14 PM GMT)

இந்திய செயற்கைகோள்களை விண்வெளிகுப்பைகளின் அச்சுறுத்தல்களில் இருந்து காப்பாற்ற ரூ.400 கோடி செலவில் இஸ்ரோ புதிய திட்டம் வகுத்துள்ளது.

புதுடெல்லி

விண்கற்கள், எரிநட்சத்திரத் தூசுகள் ஆகியவை இயற்கை விண்வெளிக் குப்பைகள் எனவும், மனிதர்களால் விண்ணுக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த, வாழ்நாள் முடிந்த செயற்கைக் கோள், செயற்கைக்கோள் பாகங்கள் செயற்கை விண்வெளிக் குப்பைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. தற்போதைய  சூழ்நிலையில் செயற்கைக் கோள்களின் தேவை அதிகமானதால் செயற்கை விண்வெளிக் குப்பைகள், இயற்கை விண்வெளிக் குப்பைகளைவிட அதிகரித்தபடி உள்ளது.

செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவுவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் விண்வெளிக் குப்பைகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. உதாரணமாக, செயல்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோள் மீது விண்வெளிக் குப்பை மோதி விபத்தை ஏற்படுத்தினால் அந்த செயற்கைக்கோள் பயனில்லாமல்போவது மட்டுமல்லாமல், விண்வெளிக் குப்பைகள் இதனால் மேலும் அதிகரிக்கிறது. இதனால் அந்த செயற்கைக்கோளை ஏவிய நாடு பொருளாதார, தொழில்நுட்பரீதியில் பின்னடைவைச் சந்திக்கும்.

மணிக்கு ஆயிரக்கணக்கான மைல் வேகத்தில் பூமியை சுற்றி வரும் பயனற்றுப் போன விண்கலத்தின் சிறிய பாகங்கள் கூட, பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியவை. விண்வெளிக் குப்பைகளுடன் மோதல் ஏற்படாமல் தவிர்க்க, சர்வதேச விண்வெளி நிலையம், அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டு உள்ள தகவலில் 2018 ஜனவரி மாதம் வரை விண்வெளியில் 1 மீட்டர் அளவிலான பொருட்கள் 5 ஆயிரமும், 10 செமீக்கு அதிகமான பொருட்கள் 20 ஆயிரமும், 10 செ.மீ அளவில் 34 ஆயிரம் பொருட்களும், 9 லட்சம் 1 செமீ முதல் 10 செமீ வரையிலான பொருட்களும், 166 மில்லியன் 1மிமீட்டர் முதல் 1 செமீ  அளவிலான வரையிலான குப்பைகள் இருக்கின்றன. இவைகள் மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 250-க்கும் மேற்பட்ட மோதல்கள் மற்றும் வெடிப்புகள் ஏற்படுகின்றன. மூன்றில் 2 பங்கு பொருட்கள்  பூமியின் சுற்றுபாதைக்கு 2 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது என கூறி உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கடந்த மாதம் இந்திய  செயற்கைக்கோள்களுக்கு குப்பைகள் மற்றும் பிற ஆபத்துக்களைக் கண்டறிய விண்வெளியில் ஒரு ஆரம்ப எச்சரிக்கையான  ‘நெட்ரா’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது.

ரூ.400 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட இந்த திட்டம், மற்ற விண்வெளி சக்திகளைப் போலவே விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வில் (எஸ்எஸ்ஏ) இந்தியாவுக்கு அதன் சொந்த திறனைக் காட்டும் வகையில் இருக்கும்.

இந்த திட்டம் விண்வெளி குப்பைகளிலிருந்து இந்திய  செயற்கைக்கோள்களுக்கு வரும் அச்சுறுத்தல்களை ‘கணிக்க’ பயன்படுகிறது. இது ஏவுகணை அல்லது விண்வெளித் தாக்குதலுக்கு எதிரான எச்சரிக்கையை கொடுக்கும் செயல்படும் அளவிற்கு  இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

எங்கள் எஸ்எஸ்ஏ முதலில் குறைந்த பூமியின் சுற்றுப்பாதைகள் அல்லது ரிமோட் சென்சிங் விண்கலங்களைக் கொண்ட லியோவுக்கு இருக்கும் என்று விண்வெளி நிறுவனம் கூறுகிறது. 

நெட்ரா அல்லது விண்வெளி பொருள் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான நெட்வொர்க் ஆகியவற்றின் கீழ், இஸ்ரோ பல கண்காணிப்பு வசதிகளை வைக்க திட்டமிட்டுள்ளது. அவை இணைக்கப்பட்ட ரேடார்கள், தொலைநோக்கிகள், தரவு செயலாக்க அலகுகள் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. அவை 10 செ.மீ முதல் 3,400 கி.மீ வரம்பிலும், 2,000 கி.மீ தூர விண்வெளி சுற்றுப்பாதைக்கு சமமாகவும் இருக்கும்.

இதன் மூலம் பூமியை மேலே இருந்து கண்காணிக்க செயற்கைக்கோள்களை வைத்துள்ள இஸ்ரோ, பூமியிலிருந்து அதனை கண்காணிக்கும் பயிற்சியையும் தொடங்கும்.

விண்வெளி குப்பைகள் இறந்த செயற்கைக்கோள்கள் அல்லது ராக்கெட்  பகுதிகளிலிருந்து கழன்று மிதக்கும் பொருட்கள்  பல ஆண்டுகளாக சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. இவைகள் செயற்கைகோள்களின்  போர்டு எலக்ட்ரானிக்ஸ் மீது மோதி அதனை முடக்குகிறது மற்றும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள செயற்கைக்கோளை செயலிழக்க செய்கிறது.

விண்வெளி குப்பைகளை கண்காணித்தல், எச்சரித்தல் மற்றும் குறைத்தல் ஆகியவற்றுக்கான சர்வதேச முயற்சிகளின் ஒரு பகுதியாக நெட்ரா முயற்சி செய்யும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள் இயங்கும் 36,000 கி.மீ தொலைவில் உள்ள பூமி சுற்றுப்பாதையை கைப்பற்றுவதே நெட்ராவின் இறுதி குறிக்கோள் ஆகும்.

Next Story