மோடியை இந்தியாவின் தந்தை என கூறியதற்கு பெருமிதம் கொள்ளாதவர்கள் இந்தியர்கள் அல்ல -மத்திய மந்திரி


மோடியை இந்தியாவின் தந்தை என கூறியதற்கு பெருமிதம் கொள்ளாதவர்கள் இந்தியர்கள் அல்ல -மத்திய மந்திரி
x
தினத்தந்தி 25 Sep 2019 10:57 AM GMT (Updated: 25 Sep 2019 10:57 AM GMT)

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தந்தை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதைப் பற்றி பெருமிதம் கொள்ளாதவர்கள் தங்களை இந்தியர்கள் என்று கருதுவதில்லை என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.

புதுடெல்லி

ஐ.நா., சபையின் பொதுக்குழு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், நடக்கிறது. இதில், கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏழு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நேற்று சந்தித்தார்.

அப்போது  பிரதமர் மோடியை, அமெரிக்க  ஜனாதிபதி பாராட்டி பேசினார். சந்திப்பு முடிந்த பிறகு மோடியும், டிரம்ப்பும் கூட்டாக பேட்டி அளித்தனர். 

அப்போது டிரம்ப்,

எனக்கும் மோடிக்குமான கருத்து ஒற்றுமை, மிகச் சிறந்ததாக உள்ளது. அவர் மீது உண்மையிலேயே அதிக மதிப்பு, ஈர்ப்பு எனக்கு உள்ளது. மிகவும் கவுரவமானவராக, மிகச் சிறந்த தலைவராக உள்ளார்.

இதற்கு முந்தைய இந்தியாவை நான் அறிவேன். அது, துண்டான நாடாகக் கிடந்தது. துண்டு துண்டாக, சண்டைகள் நிறைந்ததாக இருந்தது.  அதையெல்லாம் சீர்செய்து, ஒருங்கிணைந்த நாடாக, இந்தியாவை மோடி மாற்றியுள்ளார். ஒரு தந்தையைப் போல, நாட்டைச் சீர்செய்து உள்ளார். அவர் இந்தியாவின் தந்தை. நாம் அவரை இந்தியாவின் தந்தை என்றே அழைக்கலாம். நாட்டிற்கு மிகச் சிறந்த பணியாற்றி இருக்கிறார் என கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதியின் பாராட்டு குறித்து சில காங்கிரஸ் தலைவர்கள் தேசத்திற்கு ஒரே ஒரு தந்தை மட்டுமே இருக்க முடியும் என்று கூறினர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தந்தை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதைப் பற்றி பெருமிதம் கொள்ளாதவர்கள் தங்களை இந்தியர்கள் என்று கருதுவதில்லை என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.

தபால் துறையில் சிபிஜிஆர்எம்எஸ் சீர்திருத்தங்களை பிரதமர்  அலுவலகத்திற்கான மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்  அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த காலங்களில் அரிதாக இருந்த விதத்தில் இந்தியா மதிக்கப்படுகிறது. வெளிநாட்டில் வாழும் மக்கள் இன்று இந்தியர் என்பதில் பெருமைப்படுகிறார்கள். பிரதமர் மோடியின் ஆளுமை மற்றும் தனிப்பட்ட அணுகுமுறை காரணமாக இது நடக்கிறது.

ஒரு பக்கச்சார்பற்ற மற்றும் தைரியமான அறிக்கை அமெரிக்காவிடமிருந்தும் அதன் ஜனாதிபதியிடமிருந்தும் வந்துள்ளது. கட்சி சார்பின்றி, அரசியல் சார்பின்றி ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு அமெரிக்க ஜனாதிபதி இந்த வகையான பாராட்டு வார்த்தைகளை ஒரு இந்தியப் பிரதமருக்காக அல்ல, வேறு எந்த உலகத் தலைவருக்காகவும் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். யாராவது இதைப் பற்றி பெருமிதம் கொள்ளவில்லை என்றால், அவர் தன்னை இந்தியர் என்று கருதவில்லை என அர்த்தம்  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story