முன்னாள் மத்திய மந்திரி மீது பாலியல் புகார் கொடுத்த சட்ட மாணவி ‘திடீர்’ கைது - ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக வழக்கு


முன்னாள் மத்திய மந்திரி மீது பாலியல் புகார் கொடுத்த சட்ட மாணவி ‘திடீர்’ கைது - ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக வழக்கு
x
தினத்தந்தி 25 Sep 2019 11:15 PM GMT (Updated: 25 Sep 2019 9:41 PM GMT)

முன்னாள் மத்திய மந்திரி மீது பாலியல் புகார் கொடுத்த சட்டக்கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஷாஜகான்பூர்,

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த் மீது அவரது சட்டக்கல்லூரியில் படித்து வரும் 23 வயது மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். சின்மயானந்த், தன்னை கற்பழித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அதன்பேரில் சின்மயானந்த் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, கடந்த வாரம் சின்மயானந்தை கைது செய்தது. அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

கடந்த திங்கட்கிழமை அவரது ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதே நாளில், அவர் நெஞ்சுவலிக்காக லக்னோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, பாலியல் புகார் அளிக்காமல் இருப்பதற்கு ரூ.5 கோடி தரவேண்டும் என்று கேட்டு சட்டக்கல்லூரி மாணவியும், அவரது உறவினர்களும் மிரட்டியதாக சின்மயானந்த் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மாணவி உள்பட 4 பேர் மீது போலீசார் பணம் பறிப்பு முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, மாணவி சார்பில் ஷாஜகான்பூர் கோர்ட்டில் நேற்றுமுன்தினம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருவதாக இருந்தது. அத்துடன், நேற்றுமுன்தினம் மாணவியிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, சட்டக்கல்லூரி மாணவி நேற்று கைது செய்யப்பட்டார். ஷாஜகான்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு காலை 9.15 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் வந்தனர்.

வீட்டுக்கு செல்லும் சாலைகளின் இருமுனைகளும் மூடப்பட்டன. அதன்பிறகு அதிகாரிகள் உள்ளே நுழைந்து மாணவியை கைது செய்தனர். முதலில், அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு வினீத் குமார் முன்பு ஆஜர்படுத்தினர். மாணவியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மாணவி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவருடைய வக்கீல் அனுப் திரிவேதி தெரிவித்தார். இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவியின் உறவினர்கள் சஞ்சய், சந்தீப், விக்ரம் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமையே கைது செய்யப்பட்டனர்.

பணம் கேட்டு மிரட்ட பயன்படுத்தப்பட்ட மொபைல் போனை மீட்பதற்காக அவர்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, மாணவிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு விளக்கம் அளித்துள்ளது.

சின்மயானந்திடம் ரூ.5 கோடி கேட்டதற்கான போதிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மாணவியின் உத்தரவின்பேரில், சின்மயானந்திடம் பணம் கேட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக, கைதான மற்ற 3 பேரும் ஒப்புக்கொண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story