தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம்; பெங்களூரு முன்னாள் காவல் ஆணையாளர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை


தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம்; பெங்களூரு முன்னாள் காவல் ஆணையாளர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை
x
தினத்தந்தி 26 Sep 2019 5:06 AM GMT (Updated: 26 Sep 2019 5:06 AM GMT)

தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் பெங்களூரு முன்னாள் காவல் ஆணையாளர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில், குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்த பிறகு, பா.ஜனதா ஆட்சி அமைந்தது. எடியூரப்பா, முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட பாஸ்கர்ராவ், கமிஷனர் பதவிக்காக ஒரு கட்சியின் பிரமுகருடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான ஆடியோ உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக பா.ஜனதா புகார் கூறியது.

பா.ஜனதா, கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சித்தராமையா, அவருடைய உதவியாளர்கள் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த சில தலைவர்கள், உயர் அதிகாரிகள் என மொத்தம் 300 பேரின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, முன்னாள் போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் உள்ளிட்ட பலர் இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளித்த குமாரசாமி, யாருடைய தொலைபேசியையும் ஒட்டு கேட்கவில்லை என்றும், அதுதொடர்பான புகார் உண்மைக்கு புறம்பானது என்றும், எத்தகைய விசாரணைக்கும் தயார் என்றும் கூறினார்.

தொலைபேசி ஒட்டுகேட்பு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு முதல் மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டார்.  இதுபற்றி விசாரணை மேற்கொள்வதற்காக, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள முன்னாள் காவல் ஆணையாளர் அலோக் குமார் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story