உ.பி.யில் 60 குழந்தைகள் பலியான விவகாரத்தில் டாக்டர் கபீல் கான் குற்றமற்றவர்: விசாரணை அறிக்கை


உ.பி.யில் 60 குழந்தைகள் பலியான விவகாரத்தில் டாக்டர் கபீல் கான் குற்றமற்றவர்: விசாரணை அறிக்கை
x
தினத்தந்தி 27 Sep 2019 8:05 AM GMT (Updated: 27 Sep 2019 8:05 AM GMT)

உ.பி.யில் 60 குழந்தைகள் பலியான விவகாரத்தில் டாக்டர் கபீல் கான் குற்றமற்றவர் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கடந்த 2017- ஆம் ஆண்டு  குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு பணம் அளிக்காத காரணத்தால் சிலிண்டர் வழங்குவதை அந்நிறுவனம் நிறுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி மேலும் குழந்தைகள் பலியாகாமல் தடுத்த டாக்டர் கபீல் கான் என்பவர் கைது செய்யப்பட்டார். எட்டு மாதங்களுக்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவர் கபீல் கான் மீதான புகார் குறித்து விசாரிக்க, துறை ரீதியாக அமைக்கப்பட்டிருந்த குழு தனது அறிக்கையை சமர்பித்துள்ளது.

அதில், இந்த சம்பவத்துக்கு மருத்துவர் கபீல் கான் காரணமல்ல என்றும் அவர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரத்தான் பாடுபட்டார் என்றும்  கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைவாகத்தான் இருக்கிறது என்று முன் கூட்டியே அவர் எச்சரிக்கை செய்ததாகவும் அவரே சொந்த செலவில் உபகரணங்களை வாங்கி குழந்தைகளை காக்க போராடியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மருத்துவர் கபீல் கான் கூறும்போது, ”நான் பலிகடா ஆக்கப்பட்டேன் என்பது எனக்கு தெரியும். ஆனால், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்” என்றார்.

Next Story