மோடி மாயை வேகமாக சரிகிறது: ‘காங்கிரஸ் புத்துயிர் பெற இரு மாநில தேர்தல் முடிவுகள் உதவும்’ மக்களவை கட்சித்தலைவர் உற்சாகம்


மோடி மாயை வேகமாக சரிகிறது: ‘காங்கிரஸ் புத்துயிர் பெற இரு மாநில தேர்தல் முடிவுகள் உதவும்’ மக்களவை கட்சித்தலைவர் உற்சாகம்
x
தினத்தந்தி 25 Oct 2019 7:02 PM GMT (Updated: 25 Oct 2019 7:02 PM GMT)

காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற இருமாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் உதவும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உற்சாகமாக கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி எழுச்சி கண்டுள்ளது. 2 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கணிசமான தொகுதிகளை அதிகம் பெற்றுள்ளது.

அந்தவகையில் மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணி கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட அதிகம் பெற்றுள்ளன. அதேநேரம் அரியானாவில் கடந்த தேர்தலில் 15 இடங்களை பெற்றிருந்த காங்கிரஸ், இந்த தேர்தலில் சுமார் 30 இடங்களை கைப்பற்றி உள்ளது.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அங்கு ஒரு இடத்தை கூட பிடிக்காத காங்கிரஸ், சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களை பெற்றிருப்பது அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அங்கு கடந்த சட்டசபை தேர்தலில் 47 இடங்களை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பா.ஜனதா இந்த தேர்தலில் சுமார் 40 இடங்களையே பெற்று பெரும்பான்மை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இந்த தேர்தல் வெற்றி காங்கிரஸ் கட்சியினருக்கு புது உற்சாகத்தை கொடுத்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் துவண்டிருந்த காங்கிரசாருக்கு, இந்த வெற்றி புது தெம்பை கொடுத்திருப்பதாக கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

நாட்டில் அதிகம் பேசப்பட்ட மோடி மாயை மிகவும் வேகமாக சரிந்து வருவதையே, அரியானா மற்றும் மராட்டிய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் பொருளாதார சரிவு போன்றவற்றால் மக்களிடம் ஏற்பட்டுள்ள விரக்தியின் வெளிப்பாடுதான், இந்த தேர்தலில் எதிரொலித்து உள்ளது.

அதேநேரம் இந்த முடிவுகள் காங்கிரஸ் கட்சியினரின் மன உறுதியை அதிகரித்து உள்ளது. அரியானாவில் கட்சி வெளிப்படுத்திய போர்க்குணமும், இரு மாநில தேர்தல் முடிவுகளும் வருகிற நாட்களில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற உதவும். இவ்வாறு அவர் உற்சாகமாக கூறினார்.

Next Story