பகத் சிங்கிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்; பிரதமருக்கு காங்கிரஸ் எம்.பி. வேண்டுகோள்


பகத் சிங்கிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்; பிரதமருக்கு காங்கிரஸ் எம்.பி. வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Oct 2019 5:57 AM GMT (Updated: 26 Oct 2019 5:57 AM GMT)

விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போபால்,

விடுதலை போராட்ட வீரர்கள் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மணீஷ் திவாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபற்றி பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி ஒரு முழு தலைமுறைக்கான நாட்டுப்பற்றாளர்களுக்கு விடுதலை போராட்ட வீரர்கள் ஷாஹீத் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் ஊக்கமளித்து உள்ளனர்.  பின்பு கடந்த 1931ம் ஆண்டு மார்ச் 23ந்தேதி தங்களது இன்னுயிரையும் அவர்கள் தியாகம் செய்துள்ளனர்.

அவர்களுக்கு ஷாஹீத் இ அசம் என்ற கவுரவம் முறைப்படி வழங்கப்பட்டு உள்ளது.  சண்டிகரின் மொஹாலி நகரில் உள்ள சண்டிகர் விமான நிலையத்திற்கு ஷாஹீத் இ அசம் பகத் சிங் விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

வருகிற 2020ம் ஆண்டு ஜனவரி 26ந்தேதி அவர்கள் 3 பேருக்கும் இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டால், 124 கோடி இந்தியர்களின் மனம் மற்றும் ஆன்மா மகிழும் என்று அதில் தெரிவித்து உள்ளார்.

ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி, பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முன்பே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story