கர்நாடகாவில் சட்டசபை இடைத்தேர்தல்:தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 13 பேர் வேட்பாளர்களாக பாஜக அறிவிப்பு

கர்நாடகாவில் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது.
பெங்களுரூ,
காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் அனைவரும் வருகிற 2023-ம் ஆண்டு வரை கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில், இந்த 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதேபோல இவர்கள் அனைவரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 16 எம்.எல்.ஏக்கள் கர்நாடக முதல்- மந்திரி எடியூரப்பா முன்னிலையில் இன்று காலை பா.ஜ.கவில் இணைந்தார்கள்.
இவர்களில் 13 பேரை இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளர்களாக அறிவித்து உள்ளது.
மத சார்பற்ற ஜனதா தளம் சார்பிலும் இடைத்தேர்தலுக்கு முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story