தேசிய செய்திகள்

சிவசேனா, என்சிபி, காங். தீவிர ஆலோசனை : குறைந்தபட்ச பொது செயல் திட்டம் இறுதி வடிவம் பெற்றதாக தகவல் + "||" + Maharashta CMP finalised; Sena to get full term CM, 1 deputy CM each from Congress, NCP

சிவசேனா, என்சிபி, காங். தீவிர ஆலோசனை : குறைந்தபட்ச பொது செயல் திட்டம் இறுதி வடிவம் பெற்றதாக தகவல்

சிவசேனா, என்சிபி, காங். தீவிர ஆலோசனை : குறைந்தபட்ச பொது செயல் திட்டம் இறுதி வடிவம் பெற்றதாக தகவல்
மராட்டியத்தில் ஆட்சியமைப்பது குறித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதால், ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கட்சிகளால் கூட்டணி அரசை அமைக்க முடியவில்லை. கவர்னர் விதித்த கெடுவுக்குள் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால் கடந்த செவ்வாய்க்கிழமை மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து தனிப்பெரும் கட்சியான பாரதீய ஜனதா அமைதி காத்து வரும் நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சியில் சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்களை நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசினார். இந்துத்வா கொள்கையை கடைபிடித்து வரும் சிவசேனா, மதசார்பற்ற கொள்கை கொண்ட காங்கிரசுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், மராட்டியத்தில் புதிய கூட்டணி உருவாவது உறுதியானது. ஆட்சியமைக்க கவர்னரிடம் உரிமை கோரும் முன்பு 3 கட்சிகளும் குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளன.

இந்தநிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் நேற்று காலை மும்பை விமானம் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ரகசியமாக சந்தித்து பேசிய தகவல் வெளியானது. அப்போது விரைவில் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும் என்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

பின்னர் மாலையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களும் அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்தினர். இதில் சிவசேனா சார்பில் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால், நவாப்மாலிக், காங்கிரசின் பிரிதிவிராஜ் சவான், மாணிக்ராவ் தாக்கரே, விஜய் வடேடிவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2½ மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, சபாநாயகர் பதவி யாருக்கு?, மற்றும் அரசில் செயல்படுத்தப்பட வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.  இதில், பேச்சுவார்த்தை இறுதி வடிவம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

சிவசேனாவுக்கு முதல் மந்திரி பதவியும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு துணை முதல் மந்திரி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு  முறையே 14,14,12 மந்திரிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி செல்லும் சரத்பவார் அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைக்க கவர்னரிடம் உரிமை கோர முடிவு செய்துள்ளனர். இந்த 3 கட்சிகளிடமும் ஆட்சி அமைக்க போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இருப்பதால், அவர்கள் உரிமை கோரும் பட்சத்தில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை விலக்கி கொள்ள வாய்ப்பு உள்ளது.

ஆனால் தனிப்பெரும் கட்சியாக திகழும் பாரதீய ஜனதா அமைதி காக்குமா? அல்லது இந்த புதிய கூட்டணியின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுமா? என்ற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது. மறுதேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இல்லை என்று பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவும், 145 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலுடன் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு கவர்னரை சந்திப்போம் என மாநில பாரதீய ஜனதா மூத்த தலைவர் நாராயண் ரானேயும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. முதல் மந்திரியாக பதவியேற்ற பின்பு முதன் முறையாக பிரதமர் மோடியை சந்தித்த உத்தவ் தாக்கரே
மராட்டிய மாநிலம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை புனே விமான நிலையத்தில் நேரில் சந்தித்து உத்தவ் தாக்கரே வரவேற்பு அளித்தார்.
2. சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்து ஒருவாரம் ஆகியும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கவில்லை: பா.ஜனதா கண்டனம்
சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்து ஒருவாரம் ஆகியும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கவில்லை என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
3. ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்: காங்கிரசை கிண்டல் செய்த பா.ஜனதா
ப.சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்தது குறித்து பா.ஜனதா, காங்கிரசை கிண்டல் செய்துள்ளது,
4. மராட்டிய கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும்; காங்கிரஸ் திடீர் கோரிக்கை
மராட்டிய கூட்டணி அரசில் தங்கள் கட்சிக்கு துணை முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று காங்கிரஸ் திடீர் கோரிக்கை வைத்து உள்ளது.
5. சாலையை சீரமைக்க கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்
குலசேகரம் அருகே சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.