அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்


அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 24 Nov 2019 2:56 PM GMT (Updated: 24 Nov 2019 2:56 PM GMT)

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 30-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக நடக்கிறது.

88 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல் மந்திரியாக ரகுபர்தாஸ் உள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிரமாக உள்ளது.

இந்நிலையில்  ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில் பிஸ்ராம்பூர் தொகுதியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:- 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஏனென்றால் அதற்கு இருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கியுள்ளது. அதேபோல ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை நாங்கள் எந்தவித கால தாமதமும் இன்றி நீக்கியுள்ளோம்.

சுதந்திரத்திற்கு பின்னர் வாக்குகளுக்காக காங்கிரஸ் மக்களை ஏமாற்றிவந்தது. முந்தைய அரசாங்கங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாடு இந்த சக்திவாய்ந்ததாக இருந்திருக்கும். 

பிரான்சில் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்கள் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும்.

ரபேல் போர் விமானங்கள் விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளன.  நாம் இப்போது எல்லைகளை கடக்க தேவையில்லை. எல்லையைத் தாண்டி பயங்கரவாத முகாம்களை குறிவைக்க நமது தேசத்தில் இருந்தே  ரபேலைப் பயன்படுத்தலாம். நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியா அடைந்த அதிகாரம் இதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story