எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 25 Nov 2019 12:20 PM GMT (Updated: 25 Nov 2019 12:20 PM GMT)

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் சிறிய கட்சிகளும், சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.

பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றியதால் மீண்டும் இருகட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவசேனா ஆட்சியில் சமபங்கும், முதல்-மந்திரி பதவியும் கேட்க அதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்ததால், அந்த அணியால் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. இதனால் அந்த கூட்டணியும் முறிந்தது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயன்றது. ஆனால் கவர்னர் விதித்த ‘கெடு’வுக்குள் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க இயலாததால், கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியை சிவசேனா கைவிடவில்லை. இதுதொடர்பாக அந்த கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் வழங்கினார்.

இந்நிலையில், எதிர்பாராத திருப்பமாக பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் சிலர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சிலரை ரகசியமாக தொடர்பு கொண்டு பேசினார்கள்.  இதனை அடுத்து, கடந்த 23ந்தேதி அதிகாலை 5.47 மணிக்கு ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டது.

மராட்டிய முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரியாக அஜித் பவார் அன்று காலை பதவியேற்று கொண்டனர்.  அவர்களுக்கு  ஆளுநர் பகத்சிங் கோசியாரி சார்பில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

எனினும், வருகிற 30ந்தேதிக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ‘கெடு’ விதித்து உள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பேசும்பொழுது, மராட்டியத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு விட்டது என கூறினார்.  அஜித் பவாருடன் இணைந்து பா.ஜ.க. அரசு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் நீதி வேண்டும் என்று வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான அகமது பட்டேல், ஆனந்த் சர்மா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் சசி தரூர் உள்ளிட்டோர் இணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் கோஷங்களை எழுப்பியும் மற்றும் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மராட்டியத்தில் பா.ஜ.க. அரசு அமைத்த விவகாரம் இரு அவைகளிலும் இன்று எதிரொலித்தது.  நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை முடக்கினர்.  இதனால் பகல் 12 மணிவரையிலும் பின்னர் மதியம் 2 மணிவரையிலும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.  பின்னர் அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  இதனை அடுத்து அவை தலைவர் நாள் முழுவதும் அவையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதேபோன்று காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் மேலவை நடவடிக்கைகளும் மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.  பின்பு மீண்டும் அவை கூடியதும் உறுப்பினர்களின் அமளியை அடுத்து அவை நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story