டெல்லி காற்று மாசு : வெடிகுண்டுகள் மூலம் ஒரேயடியாக மக்களை கொன்று விடலாம் -சுப்ரீம் கோர்ட் ஆவேசம்


டெல்லி காற்று மாசு : வெடிகுண்டுகள் மூலம் ஒரேயடியாக மக்களை கொன்று விடலாம் -சுப்ரீம் கோர்ட் ஆவேசம்
x
தினத்தந்தி 25 Nov 2019 12:27 PM GMT (Updated: 25 Nov 2019 12:27 PM GMT)

டெல்லி காற்று மாசு தொடர்பாக வெடிகுண்டுகள் மூலம் ஒரேயடியாக மக்களை கொன்று விடலாம் என மத்திய மாநில அரசுகளிடம் சுப்ரீம் கோர்ட் ஆவேசமாக கூறியுள்ளது.

புதுடெல்லி

டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில்  நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகும், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பது தொடர்வதாகவும், இதனால் ஏற்படும் காற்று மாசால் டெல்லி, என்சிஆர் பகுதியில் வாழும் மக்கள் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதாகவும், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

காற்று மாசை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மத்திய அரசை கண்டித்த நீதிபதிகள், கேஸ் பெட்டகத்தில் வாழும்படி ஏன் மக்களை கட்டாயப்படுத்துகிறீர்கள், இதற்கு பேசாமல் வெடிகுண்டுகள் மூலம் ஒரேயடியாக மக்களை கொன்று விடலாம் என வேதனையுடன் குறிப்பிட்டனர். 

மத்திய அரசும், டெல்லி அரசும் தங்களிடையேயான வேறுபாடுகளை மறந்து, ஒன்றாக அமர்ந்து பேசி, நகரின் பல பகுதிகளில் காற்று சுத்தப்படுத்தும் கோபுரங்களை அமைப்பது தொடர்பான திட்டத்தை 10 நாள்களில் தாக்கல் செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தரமான குடிநீர், காற்று வழங்காததற்காக, மக்களுக்கு இழப்பீடு வழங்க நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது? என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு  சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. 6 வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

Next Story