சபரிமலை செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கேரளா வருகை


சபரிமலை செல்வதற்காக சமூக  ஆர்வலர் திருப்தி தேசாய் கேரளா வருகை
x
தினத்தந்தி 26 Nov 2019 2:39 AM GMT (Updated: 26 Nov 2019 2:39 AM GMT)

சபரிமலை செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

திருவனந்தபுரம், 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற நிலையே நீடிக்கிறது. 

ஆனால்,சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று கேரள அரசு தெரிவித்தது. நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு தர முடியும், அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதையும் மீறி சபரிமலை செல்ல முயற்சித்த சில பெண்களை, கேரள போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பி அனுப்பினர். 

இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவில் செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கேரளா வருகை தந்துள்ளார். திருப்தி தேசாய், பிந்து உள்பட7 பேர் கொண்ட குழு கொச்சி விமான நிலையம் வந்துள்ளது. கோட்டயம் வழியாக சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

சபரிமலை அய்யப்பன் கோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டால், நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இன்று அரசியலைமைப்பு தினம் ஆகும். எங்களை யாராவது தடுத்து நிறுத்த முயற்சித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வோம். நான் சபரிமலை வருவது குறித்து ஏற்கனவே, நான் முதல் மந்திரி மற்றும் டிஜிபிக்கு தகவல் தெரிவித்துவிட்டேன். எனவே, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவர்களின் கடமையாகும்” என்றார். 

சபரிமலை செல்ல பாதுகாப்பு அளிக்கக் கோரி கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் திருப்தி தேசாய் உள்ளிட்ட 7 பேர் மனு அளித்துள்ளனர்.


Next Story