நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம் : சோனியா காந்தி


நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம் : சோனியா காந்தி
x
தினத்தந்தி 26 Nov 2019 6:04 AM GMT (Updated: 26 Nov 2019 6:04 AM GMT)

நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மராட்டியத்தில், காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில்,  திடீர் திருப்பமாக 105 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதா 54  இடங்களை வென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  அஜித்பவாருடன் திடீர் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் உரிமை கோரியதை தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி 23-ந் தேதி அதிகாலையில் ரத்து ஆனது.

இதைத்தொடர்ந்து, கவர்னர் விடுத்த அழைப்பை ஏற்று பாரதீய ஜனதாவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். வருகிற 30-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் ‘கெடு‘ விதித்தார்.

இதை எதிர்த்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனு மீது இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

Next Story