அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை - சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு


அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை - சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2019 9:57 AM GMT (Updated: 26 Nov 2019 9:21 PM GMT)

அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது.

லக்னோ,

அயோத்தி வழக்கில் கடந்த 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று மனுதாரர்களில் ஒன்றான உத்தரபிரதேச சன்னி மத்திய வக்பு வாரியத்தின் தலைவர் சுபர் பரூக்கி அறிவித்தார்.

அவரது தனிப்பட்ட அறிவிப்புக்கு வாரியத்தின் உறுப்பினர்கள் அதுல் ரசாக் கான், இம்ரான் மபூத் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வாரிய கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, லக்னோவில் உள்ள சன்னி வக்பு வாரியத்தின் மத்திய அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. வாரியத்தின் 8 உறுப்பினர்களில், இம்ரான் மபூத்தை தவிர, மற்ற 7 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்தது. அப்துல் ரசாக் கானை தவிர, மற்ற 6 உறுப்பினர்களும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று உறுதியாக தெரிவித்தனர்.

எனவே, பெரும்பான்மை முடிவு அடிப்படையில், சீராய்வு மனு தாக்கல் செய்வதில்லை என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், மசூதி கட்ட அரசு ஒதுக்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சில உறுப்பினர்கள், மசூதியுடன் சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றையும் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்டம் முடிவடைந்த பிறகு, சன்னி வக்பு வாரிய தலைவர் சுபர் பரூக்கி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அயோத்தி வழக்கு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது தொடர்பாக முடிவு எடுக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக உறுப்பினர்கள் கூறினர். எனவே, அதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story