லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க இலவச எண் அறிமுகம்: நானே தனிப்பட்ட முறையில் கவனிக்க உள்ளேன் - ஜெகன்மோகன் ரெட்டி


லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க இலவச எண் அறிமுகம்: நானே தனிப்பட்ட முறையில் கவனிக்க உள்ளேன் - ஜெகன்மோகன் ரெட்டி
x
தினத்தந்தி 26 Nov 2019 1:00 PM GMT (Updated: 26 Nov 2019 1:00 PM GMT)

ஆந்திராவில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க இலவச உதவி எண்ணை ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திர முதல்-மந்திரியாக  கடந்த மே மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஊழலை ஒழிக்க ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் புகார் பதிவு செய்ய குடிமக்கள் உதவி மையத்தை தொடங்கி வைத்தார்.

குடிமக்கள் உதவி மையத்தின் செயல்பாட்டை சரிபார்க்க ஜெகன் மோகன் ரெட்டி தானே ஹெல்ப்லைன் எண்ணை (14400) அழைத்தார். ஹெல்ப்லைனில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் சுவரொட்டிகளையும் வெளியிட்டார்.

இந்த நடவடிக்கை குறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில்,

ஊழலுக்கு எதிராக இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் தொடர்பான புகார்களை நானே தனிப்பட்ட முறையில் கவனிக்க உள்ளேன். இந்த உதவி எண் மையமானது, லஞ்சத்தை, ஊழலை அரசின் அனைத்து மட்டங்களிலும் ஒழிப்பதற்கான ஒரு நடவடிக்கை' என்றார்.

 லஞ்ச ஒழிப்பு உதவி எண் தொடர்பான போஸ்டர்கள், ஆந்திர முதல்-மந்திரியின் முகாம் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த சுவரொட்டியில் ஊழலை ஒழிக்க கைகோர்ப்போம், ஊழலை காணும்போதெல்லாம் உங்கள் குரலை உயர்த்துங்கள் , ஊழலை ஒழிக்கவும், ஆந்திராவை வளமாக்கவும், ஆந்திராவை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அரசுத்துறை அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் 14400 என்ற லஞ்ச ஒழிப்பு உதவி எண்ணை அழைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மீது  15 முதல் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story