“இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கர்” மராட்டிய மாநில சட்டப்பேரவை நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது


“இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கர்” மராட்டிய மாநில சட்டப்பேரவை நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது
x
தினத்தந்தி 26 Nov 2019 1:18 PM GMT (Updated: 26 Nov 2019 2:06 PM GMT)

மராட்டிய மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது.

மும்பை,

மராட்டியத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று சுப்ரீம்  கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மராட்டிய சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்தநிலையில்,  போதிய பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே  முதல்-மந்திரி பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். அஜித் பவாரும் ராஜினாமா செய்தார்.

இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கரை இடைக்கால சபாநாயகராக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மராட்டிய மாநில சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது.  எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணத்தை காளிதாஸ் கொலம்ப்கர் செய்து வைக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் என்பது, எம்எல்ஏக்கள் பதவியேற்புக்காக மட்டுமே என்று தெரிகிறது.

Next Story