போலீசார் பாதுகாப்பு தர மறுப்பு: சபரிமலை தரிசனத்துக்கு வந்த 5 பெண்கள் திரும்பி சென்றனர் - ‘மீண்டும் வருவோம்’ என பேட்டி


போலீசார் பாதுகாப்பு தர மறுப்பு: சபரிமலை தரிசனத்துக்கு வந்த 5 பெண்கள் திரும்பி சென்றனர் - ‘மீண்டும் வருவோம்’ என பேட்டி
x
தினத்தந்தி 27 Nov 2019 10:30 PM GMT (Updated: 27 Nov 2019 9:04 PM GMT)

போலீசார் பாதுகாப்பு தர மறுத்ததால், சபரி மலைக்கு செல்ல இருந்த திருப்தி தேசாய் உள்ளிட்ட 5 பெண்கள் பாதியில் திரும்பி சென்றனர். ‘மீண்டும் சபரிமலைக்கு வருவோம்’ என அவர்கள் தெரிவித்தனர்.

கொச்சி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் புனேயை சேர்ந்த பெண்ணியவாதியான திருப்தி தேசாய் உள்ளிட்ட 5 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக விமானம் மூலம் நேற்றுமுன்தினம் கொச்சிக்கு வந்தனர்.

அவர்களை கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த பிந்து அம்மினி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து சபரிமலை செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு திருப்தி தேசாய் உள்ளிட்ட பெண்கள் கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த இந்து அமைப்பை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த சமயத்தில், பிந்து அம்மினி மீது பத்மநாபன் என்பவர் மிளகுபொடி ’ஸ்பிரே’ அடித்தார். இதனால் பத்மநாபனை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே சபரிமலை செல்வதற்கு பாதுகாப்பு தர முடியாது என்று போலீசார் மறுத்து விட்டனர். இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சபரிமலைக்கு செல்லும் திட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினார். இதனால் நிலக்கல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், பெண்கள் கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.

போலீசார் பாதுகாப்பு தர முடியாது என்று கூறி விட்டதால், சபரிமலை தரிசனத்துக்கு செல்லும் பயணத்தை கைவிட்டுவிட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு விமானம் மூலம் திருப்திதேசாய் உள்ளிட்ட பெண்கள் புனேவுக்கு சென்றனர்.

முன்னதாக திருப்தி தேசாய் உள்ளிட்டோர் கூறுகையில், சபரிமலைக்கு செல்ல போவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன், மந்திரிகள், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்து விட்டுதான் கொச்சிக்கு வந்தோம். ஆனாலும் போலீசார் பாதுகாப்பு தர மறுத்து விட்டனர். மீண்டும் சபரிமலைக்கு வருவோம். இது எங்களுடைய உரிமை என்று தெரிவித்தார்.

மிளகுபொடி ஸ்பிரே தெளிக்கப்பட்ட பிந்து அம்மினி கூறுகையில், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் நான் சபரிமலையில் சாமி தரிசனம் செய்வேன். ஜனவரி 2-ந் தேதி 100 பெண்களுடன் சபரிமலைக்கு வருவேன். போலீசார் அனுமதி வழங்கவில்லையென்றால் கோர்ட்டை நாடுவேன் என்றார்.


Next Story