மத்திய அரசு துறைகளில் 7 லட்சம் காலி பணியிடங்கள்: நாடாளுமன்றத்தில் வெளியான முக்கிய தகவல்கள்


மத்திய அரசு துறைகளில் 7 லட்சம் காலி பணியிடங்கள்: நாடாளுமன்றத்தில் வெளியான முக்கிய தகவல்கள்
x
தினத்தந்தி 27 Nov 2019 10:45 PM GMT (Updated: 27 Nov 2019 9:12 PM GMT)

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 7 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் முக்கிய தகவல் வெளியானது.

புதுடெல்லி,

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மொத்தம் 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 பணியிடங்கள் இருக்கின்றன. இதில் காலி பணியிடங்கள், அந்த இடங்களை நிரப்புதல் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு மத்திய பணியாளர் நலன் துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் பல முக்கிய தகவல்கள் அடங்கி உள்ளன. அவை வருமாறு:-

* மத்திய அரசின் மொத்த பணியிடங்கள் 38 லட்சத்து 2 ஆயிரத்து 779. இவற்றில் தற்போது நிரப்பப்பட்டுள்ள இடங்கள் 31 லட்சத்து 18 ஆயிரத்து 956. காலி பணியிடங்கள் சுமார் 7 லட்சம்.

* ஒரு பணியிடம் 2 அல்லது 3 ஆண்டுகள் காலியாக இருந்து நிரப்பப்படாமல் இருந்தால் அந்தப் பணியிடம் ஒழிக்கப்பட்டு விட்டதாக அர்த்தம்.

* பல்வேறு துறைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், 2019-20-ம் ஆண்டில், 1 லட்சத்து 5 ஆயிரத்து 338 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன்) தொடங்கி இருக்கிறது.

* 2017-18-ம் ஆண்டில், ரெயில்வே அமைச்சகம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 573 பணியிடங்களை நிரப்புதற்காக மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கைகளை வெளியிட்டது. இது குரூப் சி மற்றும் லெவல்-1 பணியிடங்கள் ஆகும். 2018-19-ம் ஆண்டில் மேலும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 138 குரூப் சி மற்றும் லெவல்-1 பணியிடங்களுக்கான மையப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.

* தபால் துறையில் 19 ஆயிரத்து 522 பணியிடங்களை நிரப்புதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்பட்டது.

மொத்தம் 4 லட்சத்து 8 ஆயிரத்து 591 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 58 ஆக குறைக்கப்படுகிறதா என்ற கேள்விக்கும் மத்திய பணியாளர் நலன் துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதில் கொடுத்தார்.

அதில் அவர், மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு வயதை 60-ல் இருந்து 58 ஆக குறைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என கூறி உள்ளார்.


Next Story