சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் மந்திரிகளாக பதவியேற்பு


சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் மந்திரிகளாக பதவியேற்பு
x
தினத்தந்தி 28 Nov 2019 2:07 PM GMT (Updated: 28 Nov 2019 2:07 PM GMT)

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா இரு தலைவர்கள் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதன்பின்பு மராட்டிய அரசில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது.  இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், சுப்ரீம் கோர்ட்டு நேற்று மாலைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டது.  தொடர்ந்து பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ராஜினாமா செய்தனர்.

இதனால் அந்த கட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.  இதைத்தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைக்க வழி பிறந்தது. இதையடுத்து, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மராட்டிய முதல் மந்திரியாக முறைப்படி இன்று பதவியேற்று கொண்டார்.  அவருக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து உள்ளார்.

அவருடன் இந்த நிகழ்ச்சியில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் ராஜாராம் பாட்டீல் மற்றும் சகன் சந்திரகாந்த் புஜ்பால், காங்கிரஸ் கட்சியின் பாலாசாஹேப் தோரட் மற்றும் நிதின் ராவத் ஆகிய 6 பேர் முறைப்படி மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.  இதன்பின்பு பதவியேற்பு விழா நிறைவடைந்தது.

Next Story