ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் 6 அதிகாரிகளுக்கு இடைக்கால ஜாமீன் - தனிக்கோர்ட்டு உத்தரவு


ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் 6 அதிகாரிகளுக்கு இடைக்கால ஜாமீன் - தனிக்கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Nov 2019 10:00 PM GMT (Updated: 29 Nov 2019 8:44 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் 6 அதிகாரிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து முதலீடு பெற்றதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் பெயர் இடம் பெற்றுள்ள நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிந்துசிறி குல்லார், நிதி அமைச்சகத்தின் முன்னாள் அதிகாரி பிரதீப் குமார் பக்கா, அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் முன்னாள் இயக்குனர் பிரபோத் சக்சேனா, முன்னாள் கீழ்நிலைச் செயலாளர் ரபீந்திர பிரசாத், நிதி அமைச்சக முன்னாள் பிரிவு அதிகாரி அஜீத்குமார் துங்தங், முன்னாள் இணைச் செயலாளர் (வெளிநாட்டு வர்த்தகம்) அனுப் கே.புஜாரி ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி நேற்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய்குமார் குஹர், அவர்கள் 6 பேருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர்கள் தலா ரூ.2 லட்சம் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு மற்றொரு நபர் உத்தரவாதமும் வழங்கி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று அப்போது நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் அவர்களுடைய ஜாமீன் மனு மீது பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

6 அதிகாரிகளின் ஜாமீன் மனு வழக்கு விசாரணையை தொடர்ந்து, இந்த வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.


Next Story