ரூ.6 ஆயிரம் கோடி செலவில் 7 மாநிலங்களில் அமல்: நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் ‘அடல் பூஜல்’ திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


ரூ.6 ஆயிரம் கோடி செலவில் 7 மாநிலங்களில் அமல்: நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் ‘அடல் பூஜல்’ திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Dec 2019 10:15 PM GMT (Updated: 25 Dec 2019 8:40 PM GMT)

நிலத்தடி நீர்வளத்தை பெருக்க ரூ.6 ஆயிரம் கோடி செலவில் 7 மாநிலங்களில் அமல்படுத்தப்பட உள்ள அடல் பூஜல் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

புதுடெல்லி,

நிலத்தடி நீர்வளத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்காக ‘அடல் பூஜல் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கர்நாடகா, அரியானா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

இதற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கி, மத்திய மந்திரிசபை நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமலில் இருக்கும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, டெல்லி விஞ்ஞான் பவனில் இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்த திட்டம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. வாஜ்பாய்க்கு அர்ப்பணிக்கப்படுகிறது. திட்டத்துக்கான செலவில் பாதித்தொகை, உலக வங்கி கடனாக பெறப்படும். மீதித்தொகை, பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். 7 மாநிலங்களில் 78 மாவட்டங்களில் உள்ள 8 ஆயிரத்து 350 கிராம பஞ்சாயத்துகள், இத்திட்டத்தால் பலன் அடையும்.

நிலத்தடி நீர் குறைவது, குடும்ப பிரச்சினையோ, தனிப்பட்ட பிரச்சினையோ அல்ல. இது, ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் பிரச்சினை. மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான கருத்து வேறுபாட்டால், தண்ணீர் சேமிப்பு தொடர்பாக ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.

தண்ணீர் பிரச்சினை மிகவும் முக்கியமானது. வாஜ்பாயின் இதயத்துக்கு நெருக்கமானது. நிலத்தடி நீர்வளம் குறைவான பகுதிகளிலும், நிலத்தடி நீர் வேகமாக குறையும் பகுதிகளிலும் இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்தும். 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடிநீர் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

தற்போதைய நிலையில், 18 கோடி கிராமப்புற குடும்பங்களில் 3 கோடி குடும்பங்களுக்குத்தான், சுத்தமான குடிநீர், குழாய் மூலம் வினியோகிக்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில், மீதி உள்ள 15 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்க இத்திட்டம் வழிவகுக்கும்.

நிலத்தடி நீர் நிர்வாகத்தில் பொதுமக்களும் பங்கேற்க வலியுறுத்தப்படும். அனைவரும் தண்ணீரை சேமிக்க வேண்டும். தண்ணீர் பயன்பாட்டை குறைக்கக்கூடிய தொழில்நுட்பத்தை ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். விவசாயிகள் நுண் நீர்ப்பாசனத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களுக்கு விவசாயிகள் மாற வேண்டும். விலை மதிக்க முடியாத இயற்கை வளமான தண்ணீரை யாரும் வீணாக்கக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும், வாஜ்பாய் குடும் பத்தினரும் மரியாதை செலுத்தினர். அங்கு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. ஆன்மிக பாடல்கள் இசைக்கப்பட்டன.

வாஜ்பாய்க்கு டுவிட்டரிலும் மோடி மரியாதை செலுத்தினார். வாஜ்பாயின் சாதனைகள் குறித்த வீடியோவை வெளியிட்டார்.


Next Story