தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம்: பா.ஜனதா தேசிய செயலாளர் உறுதி


தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம்: பா.ஜனதா தேசிய செயலாளர் உறுதி
x
தினத்தந்தி 25 Dec 2019 11:15 PM GMT (Updated: 25 Dec 2019 9:18 PM GMT)

தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் உறுதியளித்துள்ளார்.

சாம்பல்பூர்,

தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கத்தில் இருந்து பா.ஜனதா பின்வாங்காது என அக்கட்சியின் தேசிய செயலாளர் கூறினார்.

ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் பா.ஜனதா தேசிய செயலாளர் சுரேஷ் பூஜாரி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய குடிமக்கள் பதிவேடு நாட்டின் நலனுக்காக செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் அனைத்து அரசு சலுகைகளையும் அனுபவித்து வருகிறார்கள். அரசியல் கட்சிகள் அவர்களை வாங்கு வங்கிகளாக பயன்படுத்தி வருகிறது. இது கொள்கை பிரச்சினை. அதனை அமல்படுத்துவதில் இருந்து பா.ஜனதா பின்வாங்காது.

வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களின் எண்ணிக்கை மேற்கு வங்காளத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. படிப்படியாக அங்கு காஷ்மீர் போன்ற சூழ்நிலை ஏற்படும். அவர்களை அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டியது அத்தியாவசியமானது.

குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சட்டம். இது நேர்மறையானது. அதற்கு எதிரான வாதங்களை எந்த சூழ்நிலையிலும் ஏற்கமுடியாது. அந்த சட்டம் பற்றி சில அரசியல் கட்சிகள் தவறான தகவல்களை தருகின்றன. இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், ஜைனர்கள், பார்சிக்கள் ஆகியோர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய முஸ்லிம் நாடுகளில் சிறுபான்மையினராக உள்ளனர்.

அந்த நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக அவர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது நல்ல முயற்சி இல்லையா? குடியுரிமை திருத்த சட்டம் பற்றி மக்களுக்கு உண்மையை எடுத்துச்சொல்ல நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் பா.ஜனதா கூட்டங்கள் நடைபெறும். அதுதவிர வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யப்படும்.

உலகளவில் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்து வருகிறது. ஆனாலும் இது தற்காலிக பிரச்சினைதான். படிப்படியாக இது சீரடையும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கை அடுத்த பட்ஜெட்டில் எடுக்கப்படும். பட்ஜெட் தாக்கல் செய்த 3 மாதத்தில் பொருளாதார நிலைமை சீரடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story