என்னை விமர்சித்தவர்கள் தேசத்துரோகிகள் - பிரக்யா சிங் தாகூர் கடும் தாக்கு


என்னை விமர்சித்தவர்கள் தேசத்துரோகிகள் - பிரக்யா சிங் தாகூர் கடும் தாக்கு
x
தினத்தந்தி 26 Dec 2019 8:44 AM GMT (Updated: 26 Dec 2019 8:44 AM GMT)

தன்னை விமர்சனம் செய்தவர்களை தேசத்துரோகிகள் என்று பிரக்யா சிங் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

போபால்,

சர்ச்சைக்குரிய கருத்துகளால் அதிகம் அறியப்படுபவர் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர். கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து போபால் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், இருக்கை மாற்றப்பட்டது தொடர்பாக பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் பிரக்யா சிங் தாகூர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் பரவின.  

இந்த நிலையில், தனது சொந்த தொகுதியான போபாலில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை சந்திக்க பிரக்யா சிங் தாகூர், போராட்டம்  நடைபெற்ற இடத்திற்கு சென்றார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவிகள் திரண்டு வந்து, பிரக்யா சிங் தாகூரை பார்த்து “பயங்கரவாதியே” திரும்பி போ என முழக்கம் இட்டனர்.

இதற்கு, பிரக்யா சிங் தாகூருடன் வந்த பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு, பதில் கோஷம் எழுப்பினர்.  இதனால், அங்கு பதற்ற சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், நிலைமையை சீராக்கினர். 

இது பற்றி பேசிய பிரக்யா சிங் தாகூர் தன்னை குறித்து தீவிரவாதிகள் என்று கூறியவர்கள் தேசத்துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ளார். போராட்டம் நடத்திய தேசிய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

Next Story