முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டாத வெளிநாட்டு சொத்துக்களை தொடரும் வருமான அதிகாரிகள்


முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டாத வெளிநாட்டு சொத்துக்களை தொடரும் வருமான அதிகாரிகள்
x
தினத்தந்தி 28 Dec 2019 6:58 AM GMT (Updated: 28 Dec 2019 6:58 AM GMT)

முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விவரங்களை 7 நாடுகளிடம் கேட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கு கடந்த மார்ச் 28ஆம் தேதி வருமான வரித்துறை  மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள் தொடர்பான புகாரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளை  அடிப்படையாகக் கொண்ட கேபிட்டல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட், அதன் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் கேமேன் தீவுகளை  அடிப்படையாகக் கொண்ட இன்ஃப்ராஸ்டிரக்சர் கம்பெனி நிறுவனத்தின் இறுதிப் பயனாளர்களாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இருந்ததாகவும், இது குறித்த விவரங்களை அவர்கள் கணக்கில் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறை நோட்டீசில் புகார் கூறப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பணமோசடி தடுப்பு விவரங்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள 7 நாடுகளிடம், முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விவரங்களை கேட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் உக்ரைனில்  இந்த மாதம் நடைபெற்ற காலாண்டு கூட்டத்தில்,  "கணக்கில் காட்டாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்" என்று கூறப்படுவது தொடர்பாக "முகேஷ் அம்பானி குடும்ப உறுப்பினர்கள்" பற்றிய தகவல்களை அது பரிமாறிக்கொண்டது, 

சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீஷியஸ், லக்சம்பர்க், செயின்ட் லூசியா ஆகிய நாடுகளிடம் இந்த விவரங்களை கேட்டுள்ளதாகவும், ஒப்பந்தப்படி 90 நாட்களில் பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

Next Story