நித்யானந்தாவை கைது செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்


நித்யானந்தாவை கைது செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
x
தினத்தந்தி 28 Dec 2019 10:23 AM GMT (Updated: 28 Dec 2019 10:23 AM GMT)

நித்யானந்தாவை கைது செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

குஜராத், கர்நாடக நீதிமன்றங்களில் நித்யானந்தா தொடர்பான வழக்குகள் சூடுபிடித்து வரும் நிலையில், அவர் தனது சத்சங்கத்தில் தினசரி, புதிது புதிதாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். 

ஜனார்த்தன சர்மாவின் இரு மகள்களும் தற்போது நித்தியோடு இருக்கும் நிலையில் அவர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளான பார்படோஸில் இருந்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர்.மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டில் இருந்து வாக்குமூலமும் தாக்கல் செய்தனர். இந்தியாவுக்கு வர விரும்பவில்லை என்றும் தங்களது தந்தை ஜனார்த்தன சர்மாவால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். 

எனினும் வரும் ஜனவரி 16ம் தேதிக்குள் இருவரும் வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டின் இந்தியத் தூதரகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் நித்யானந்தாவை கைது செய்ய உள்துறை  உத்தரவிட்டிருப்பது தற்போது கர்நாடக அரசு வட்டார தகவல்கள்  மூலமாக தெரியவந்து உள்ளது.

பெங்களூரு ஆசிரமத்தில் திருச்சி இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் நித்யானந்தாவை கைது செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

2015 ஆம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் பிடதி ஆசிரமத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது தாயார் ஜான்சிராணி, ‘என் மகளை ஆசிரமத்தில் கொலை பண்ணிட்டாங்க. அவளது உடலை அவசர அவசரமா புதைக்க சொல்லி ஆசிரமத்திலிருந்து அழுத்தம் கொடுத்தாங்க’ என்று அப்போதே போலீசில் புகார் செய்திருந்தார்.

இந்நிலையில்  ஜான்சிராணி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல்வேறு அரசு உயரதிகாரிகளுக்கு புகார்களை அனுப்பி வைத்துள்ளார். 

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உத்தரவுப்படி உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக, கர்நாடக மாநில அரசுகளின் உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் நேற்று அனுப்பப்பட்டு உள்ளது.

அந்தக் கடிதத்தில், "நித்யானந்தா மீதான வழக்குகளின் நிலை என்ன என்பதை ஆராய்ந்து, வழக்குகளில் நித்யானந்தாவுக்கு முன்ஜாமீன் கொடுக்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும். முன்ஜாமீன் வழங்கப்பட்டிருக்கவில்லையென்றால் அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நித்யானந்தாவை இந்தியா கொண்டு வந்து அவர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  கூறப்பட்டுள்ளது.

Next Story