7 நாட்களுக்குள் தூக்கில் போட ‘கெடு’ நிர்ணயிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு


7 நாட்களுக்குள் தூக்கில் போட ‘கெடு’ நிர்ணயிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
x
தினத்தந்தி 22 Jan 2020 10:12 PM GMT (Updated: 22 Jan 2020 10:12 PM GMT)

மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தூக்கில் போட ‘கெடு’ நிர்ணயிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2012-ம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’ பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு ஜனவரி 22-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால், அதன் பிறகும் அந்த குற்றவாளிகள், கருணை மனு, கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ததால், தூக்கில் போடுவது தாமதம் ஆனது. இப்போது, பிப்ரவரி 1-ந் தேதி, தண்டனையை நிறைவேற்ற கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு, தூக்கு தண்டனையை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, அவர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்ய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், தூக்கு தண்டனையை 7 நாட்களுக்குள் நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். ஒருவேளை, குற்றவாளி, ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய விரும்பினால், அந்த 7 நாள் காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

ஒரு குற்றவாளியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் மரண தண்டனை உத்தரவு பிறப்பிப்பதை அனைத்து கோர்ட்டுகள், மாநில அரசுகள் மற்றும் சிறைத்துறை நிர்வாகத்துக்கு கட்டாயமாக்க வேண்டும்.

அவருடைய சக கைதிகளின் கருணை மனுவோ, மறுஆய்வு மனுவோ, சீராய்வு மனுவோ நிலுவையில் இருந்தாலும், அந்த குற்றவாளிக்கு அடுத்த 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story