‘நிர்பயா’ குற்றவாளியின் கருணை மனு நிராகரிப்பை எதிர்த்த மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


‘நிர்பயா’ குற்றவாளியின் கருணை மனு நிராகரிப்பை எதிர்த்த மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Jan 2020 5:25 AM GMT (Updated: 29 Jan 2020 9:27 PM GMT)

‘நிர்பயா’ குற்றவாளி முகேஷ்குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு குற்றவாளி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

‘நிர்பயா’ என அழைக்கப்படுகிற மருத்துவ மாணவி, டெல்லியில் ஒரு கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டினால் உறுதி செய்யப்பட்டு விட்டது.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் கடைசி சட்ட ஆயுதமாக கருதப்படுகிற சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை கடந்த 17-ந்தேதி ஜனாதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரையும் தூக்கில் போட டெல்லி செசன்சு நீதிபதி சதீஷ்குமார் மரண வாரண்டு பிறப்பித்தார். 4 பேரையும் 1-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முகேஷ் குமார் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்டு அன்றே விசாரணை முடிவடைந்தது. நேற்று இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கருணை மனு தொடர்பான அத்தனை ஆவணங்களையும் ஜனாதிபதியின் பார்வைக்கு முன்வைக்கவில்லை என்ற குற்றவாளி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளி சிறையில் சரியாக நடத்தப்படவில்லை என்ற வாதம் கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான வாதமாக கோர்ட்டில் எடுத்துக் கொள்ள முடியாது.

குற்றவாளியின் கருணை மனு மீது மிகவும் விரைவாக முடிவெடுத்து நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற வாதமும் ஏற்புடையது அல்ல.

கருணை மனு மீது விரைவாக முடிவெடுத்ததால் அது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவு என்றோ, தீர ஆராயாமல் எடுக்கப்பட்ட முடிவு என்றோ கூறும் வகையில் இந்த முடிவு அமையவில்லை. எனவே குற்றவாளியின் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங் தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து கடந்த மாதம் 18-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.,

இன்று (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு குறிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story