பேட்மிண்டன் வீராங்கனை: சாய்னா நேவால் பா.ஜனதாவில் இணைந்தார்


பேட்மிண்டன் வீராங்கனை: சாய்னா நேவால் பா.ஜனதாவில் இணைந்தார்
x
தினத்தந்தி 29 Jan 2020 7:50 AM GMT (Updated: 29 Jan 2020 9:19 PM GMT)

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

புதுடெல்லி,

இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் (வயது 29), பேட்மிண்டன் வரலாற்றில் புதிய சரித்திரத்தை படைத்தவர். 2003-ம் ஆண்டிலிருந்து சர்வதேச போட்டிகளில் கால்பதித்து இந்தியாவிற்காக பதக்கங்களை குவித்தது மட்டுமின்றி, இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு அடுத்தப்படியாக சிறுவர்களையும், இளைஞர்களையும் பேட்மிண்டன் மட்டையை கையில் பிடிக்கச் செய்தவர்.

ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்தியாவிற்கு பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சாய்னா நேவால். 2012-ல் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். பேட்மிண்டன் போட்டியில் சீனர்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில் வெற்றிக்கோப்பையை முத்தமிட்டவர். ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளில் அபாரமாக விளையாடி 24 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார். இந்திய அரசின் விருதுகளான, பத்ம பூஷண், அர்ஜுனா விருது மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றுள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆதரவான கருத்துகளை பதிவு செய்துவந்தார். இந்நிலையில், இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாய்னா நேவால் அரசியல் பிரவேசத்தை தொடங்கி உள்ளார்.

அவர், நேற்று டெல்லியில் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். சாய்னா நேவாலின் மூத்த சகோதரி சந்திரன்சுவும் பா.ஜனதாவில் சேர்ந்தார். பா.ஜனதா பொதுச் செயலாளர் அருண் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றது உட்பட 24 சர்வதேச பட்டங்களுடன் சாய்னா நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளார். இந்திய மக்கள் அவரால் பெருமிதம் கொள்கிறார்கள். அவர், ஒரு உத்வேகம் தரும் பிரபலம் ஆவார்” என்றார்.

பா.ஜனதாவில் இணைந்த சாய்னா நேவால் பேசுகையில், “நான் ஒரு கடின உழைப்பாளி, கடினமாக உழைப்பவர்களை விரும்புகிறேன். பிரதமர் மோடி தேசத்திற்காக இரவும், பகலுமாக பணியாற்றி வருகிறார். அவருடன் நான் நாட்டுக்காக ஏதாவது செய்ய முடிந்தால், அது எனக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். பிரதமர் மோடியிடமிருந்து நிறைய உத்வேகம் பெறுகிறேன். அவர் என்னை ஊக்கப்படுத்துகிறார்” என்றார்.

“இன்று நாட்டுக்காக பணியாற்றும் கட்சியில் இணைந்து உள்ளேன். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் கடினமாக உழைப்பதை எதிர்நோக்கி உள்ளேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் சாய்னா நேவால் பா.ஜனதாவில் இணைந்து உள்ளார்.

சாய்னாவுக்கு என்னவிதமான கட்சிப் பணி வழங்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், இளைஞர்களை சென்றடையும் விதமாக டெல்லி தேர்தல் பிரசாரத்தில் சாய்னா நேவாலை பா.ஜனதா ஈடுபடுத்தலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story