எல்லாமே பேச்சுதான், வேறு எதுவுமே இல்லை - பட்ஜெட் குறித்து ராகுல்காந்தி கருத்து


எல்லாமே பேச்சுதான், வேறு எதுவுமே இல்லை - பட்ஜெட் குறித்து ராகுல்காந்தி கருத்து
x
தினத்தந்தி 1 Feb 2020 11:15 PM GMT (Updated: 2 Feb 2020 6:53 AM GMT)

வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையாக இருக்கிறது. இதில், எல்லாமே பேச்சுதான், வேறு எதுவுமே இல்லை என்று ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பட்ஜெட் உரை, இரண்டே முக்கால் மணி நேரம் நடந்தது. வரலாற்றிலேயே இதுதான் மிக நீண்ட பட்ஜெட் உரை. ஆனால், எல்லாமே பேச்சு, பேச்சாகவே இருக்கிறது. வேறு எதுவுமே இல்லை.

நாடு சந்திக்கும் முக்கியமான பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற எந்த தீர்வும் இல்லை. பொருளாதாரம் உள்பட எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லாமல், வெறும் தந்திர உபாயத்தையே பார்க்க முடிகிறது. உறுதியான யோசனை எதுவும் இல்லை.

இது, அரசின் மனநிலையை காட்டுகிறது. பட்ஜெட் உரையில், சில பேச்சுகள், திரும்பத்திரும்ப வருகின்றன. ஆங்காங்கே அலை பாய்கின்றன. அரசின் அணுகுமுறை வெறுமையாக இருக்கிறது.

நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பது இளைஞர்களுக்கு தெரியும். அவர்களுக்கு வேலை இல்லை. அவர்களுக்கு உதவும் வகையில் எதுவும் நடக்கப்போவதும் இல்லை என்று ராகுல்காந்தி கூறினார்.

Next Story