டெல்லி காவல்துறையை அமித்ஷா தவறாக பயன்படுத்துகிறார் ; கெஜ்ரிவால் பாய்ச்சல்


டெல்லி காவல்துறையை அமித்ஷா தவறாக பயன்படுத்துகிறார் ; கெஜ்ரிவால் பாய்ச்சல்
x
தினத்தந்தி 5 Feb 2020 8:08 AM GMT (Updated: 5 Feb 2020 8:08 AM GMT)

டெல்லி காவல்துறையை அமித்ஷா தவறாக பயன்படுத்துகிறார் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

 டெல்லி ஷாஹீன் பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட கபில் பைசலா ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் என்று போலீசார் தெரிவித்தனர். அவரும், அவரது தந்தையும் 2019-ம் ஆண்டு அந்த கட்சியில் சேர்ந்தனர். அவரது செல்போனை கைப்பற்றி அதில் இருந்து அவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததற்கான புகைப்படம் மற்றும் தகவல்களை சேகரித்துள்ளோம் என்று போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் தியோ கூறினார்.

இந்த நிலையில், டெல்லி காவல்துறையின் கூற்றை  ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது ; - “டெல்லி தேர்தலுக்கு முன்பாக மிகவும் தரம் தாழ்ந்த யுக்திகளில் அமித்ஷா இறங்கியுள்ளார். என்னை பயங்கரவாதி என முத்திரை குத்த நினைத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், தற்போது பாஜக டெல்லி போலீசை தவறாக பயன்படுத்த தொடங்கியுள்ளது.  பாஜக விரக்தியில் உள்ளது.  தேர்தலுக்கு சில தினங்களே இருப்பதால், விரக்தியில் அமித்ஷா அனைத்து வகையான தரம் தாழ்ந்த யுக்திகளையும் பயன்படுத்துகிறார். 

டெல்லி மக்களும் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்காக எனக்கு எதிராக பரப்பப்படும் சதித்திட்டங்கள் என அனைவருக்கும் தெரியும்” என்றார். 

Next Story