ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகர் முடிவு எடுப்பார் தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு:    சபாநாயகர் முடிவு எடுப்பார்   தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Feb 2020 9:15 PM GMT (Updated: 14 Feb 2020 8:41 PM GMT)

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுப்பார் என்று கூறி, தி.மு.க.வின் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி, 

தமிழக சட்டசபையில் கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீது நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள், நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ப.தனபாலிடம் தி.மு.க. மனு அளித்ததாகவும், ஆனால் அதன்மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி தி.மு.க. மற்றும் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

அதை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்றும், சபாநாயகரின் முடிவே இறுதியானது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

நீண்ட காலம் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு, கடந்த 4-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ் மீது சபாநாயகர் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து, அவருடைய கருத்துகளை கேட்டு அட்வகேட் ஜெனரல் 2 வாரங்களில் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

சபாநாயகர் முடிவு எடுப்பார்

இந்தநிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் சட்டசபை செயலாளர் தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜராகி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் இந்த மனு செயலற்றதாகிறது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அத்துடன், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story