அமெரிக்காவில் நெருக்கடி நிலை பிரகடனம்: இந்தியாவில் பேரிடராக அறிவிப்பு; பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்


அமெரிக்காவில் நெருக்கடி நிலை பிரகடனம்: இந்தியாவில் பேரிடராக அறிவிப்பு; பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்
x
தினத்தந்தி 15 March 2020 12:15 AM GMT (Updated: 2020-03-15T03:30:47+05:30)

கொரோனா வைரஸ் தாக்குதலை பேரிடராக அறிவித்துள்ள மத்திய அரசு, பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும், மருத்துவ செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் கூறி இருக்கிறது. அமெரிக்காவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கர்நாடக மாநிலத்தில் 76 வயதான முதியவர் ஒருவரும், டெல்லியில் 68 வயது மூதாட்டி ஒருவரும் பலியாகி உள்ளனர்.

இந்த நோய்க்கிருமி மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், புதிதாக உத்தரபிரதேசத்தில் 5 பேருக்கும், ராஜஸ்தான், டெல்லியில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார துறை அதிகாரி ஒருவர் நேற்று கூறினார்.

இந்தியாவில் கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்து இருப்பதாக கூறிய மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் சஞ்சீவ குமார் தெரிவித்தார். இவர்களில் 16 பேர் இத்தாலியில் இருந்தும், ஒருவர் கனடாவில் இருந்தும் வந்த சுற்றுலா பயணிகள் ஆவார்கள்.

கேரளாவில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 19 பேரில், 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

மராட்டியத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் 11 பேரும், டெல்லியில் 7 பேரும், கர்நாடகத்தில் 6 பேரும், லடாக் யூனியன் பிரதேசத்தில் 3 பேரும், ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா, பஞ்சாப், காஷ்மீரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்து இருப்பதாகவும், நாடு முழுவதும் 42 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறிய அவர், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் சுகாதார நெருக்கடி நிலை எதுவும் பிறப்பிக்கப் படவில்லை என்றும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதேபோல் மேற்கு வங்காளம், கோவா மாநிலங்களிலும் வருகிற 31-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட நேற்று உத்தரவிடப்பட்டது.

மராட்டிய மாநிலத்தில் நகர்ப்புற பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

கர்நாடகத்தில் நேற்று முதல் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. பெங்களூருவில் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் மூடப்பட்டதாலும், பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாலும் சாலைகளில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்தது. இதனால் மெஜஸ்டிக் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

பல்லாரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஹம்பிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இன்று முதல் ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று வந்திருந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்காக முகக்கவசத்துடன் நடந்து சென்றனர்.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருந்தொற்று நோயான கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும், கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகளின் சார்பில் தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு சென்ற இந்தியர்கள் 21 பேர் அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். விமானத்தில் இருந்து இறங்கியதும் அவர்கள் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று இருக்கும் இந்தியர்கள், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.

கேரளாவில் கொரோனா நோய்க்கிருமி தாக்கியவர்களில் 3 பேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் அங்கு வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரைகளுக்கு செல்லவேண்டாம் என்று பொதுமக்களை அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.

கேரளாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க தம்பதி, தங்களுக்கு காய்ச்சல் இருப்பதாக கருதியதால் ஆலப்புழாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திடீரென்று வெளியேறிவிட்டனர். கொச்சி விமானநிலையத்தில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு காய்ச்சல், இருமல் இருப்பதால் கமலச்சேரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கொரோனா வைரசுக்கு முதல் பலி கர்நாடகத்தில் நடந்து இருப்பதால், அங்கு படித்து வரும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் கேரளா திரும்புவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், எல்லை பகுதியில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறி உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்திய-வங்காளதேச எல்லை பகுதியில் உள்ள 37 சோதனைச்சாவடிகளில் 19 சோதனைச்சாவடிகளின் வழியாக மட்டுமே மக்கள் சென்று வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்திய-நேபாள எல்லையில் 4 சோதனைச்சாவடிகள் மட்டுமே திறந்து இருக்கும் என்றும் உள்துறை அமைச்சக இணைச்செயலாளர் அனில் மாலிக் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 46 மாநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதுவரை 47 பேர் பலியாகி இருக்கிறார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்து தவிர பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Next Story