வீட்டை காலி செய்யுமாறு டாக்டர்களை வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை - வீட்டு உரிமையாளர்களுக்கு டெல்லி அரசு எச்சரிக்கை


வீட்டை காலி செய்யுமாறு டாக்டர்களை வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை - வீட்டு உரிமையாளர்களுக்கு டெல்லி அரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 March 2020 8:30 PM GMT (Updated: 25 March 2020 7:41 PM GMT)

வீட்டை காலி செய்யுமாறு டாக்டர்களை வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு உரிமையாளர்களுக்கு டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மாநில உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் தலைமை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டதாவது:-

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் வாடகைக்கு குடியிருக்கும் வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வற்புறுத்தி வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு நெருக்கடி அளிப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்து உள்ளது.

வீட்டு உரிமையாளர்களின் இந்த நடவடிக்கையை, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிரானதாகவும் அரசு ஊழியர்கள் பணியாற்றுவதை தடுக்கும் வகையிலும், அத்தியாவசிய பணிகளை நிறுத்தும் வகையிலும் செய்யப்படும் குற்றமாகவும் அரசு கருதுகிறது.

தொற்றுநோய்கள் சட்டம், 1897-ன் கீழ் தற்போது டெல்லி அரசு வெளியிட்டுள்ள அவரச சட்டத்தின் கீழ் மாவட்ட நீதிபதிகள், மாநகராட்சி துணை கமிஷனர்கள், போலீஸ் துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் இதுபோன்று மருத்துவர்களையும் மருத்துவ பணியாளர்களையும் வீடு காலி செய்யுமாறு வற்புறுத்தும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை டெல்லி உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளருக்கு தினசரி அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story