கொரோனா பீதியால் வீட்டில் இருந்து வேலை செய்யும் மத்திய மந்திரிகள்; அவசியமற்ற சந்திப்புகள் தவிர்ப்பு


கொரோனா பீதியால் வீட்டில் இருந்து வேலை செய்யும் மத்திய மந்திரிகள்; அவசியமற்ற சந்திப்புகள் தவிர்ப்பு
x
தினத்தந்தி 26 March 2020 11:25 PM GMT (Updated: 26 March 2020 11:25 PM GMT)

கொரோனா வைரஸ் பீதியால் மத்திய மந்திரிகள் பலரும் தங்கள் வீடுகளில் இருந்துகொண்டே அலுவலக பணிகளை கவனிக்கிறார்கள். அவசியமற்ற சந்திப்புகளை அவர்கள் தவிர்க்கிறார்கள்.

புதுடெல்லி, 

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், நாட்டு மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். முடிந்தளவுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதனால் பல தனியார் நிறுவனங்களும் சரி, அரசு துறை அலுவலகங்களும் சரி, அதன் அதிகாரிகளையும், ஊழியர்களையும் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளன.

சமூக அளவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கினால் அதைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம். இதனால்தான் டெல்லியில் பிரதமர் மோடி தனது மந்திரிசபை கூட்டத்தை கூட்டி நடத்திய ஆலோசனையின்போது புதிய நடைமுறை பின்பற்றப்பட்டது.

மந்திரிகள் மிக அருகாமையில் உட்கார வைக்கப்படவில்லை. ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டே அமர்ந்திருந்தனர். அதற்கு ஏற்பவே அவர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, அவசியமற்ற சந்திப்புகள் அனைத்தையும் தவிர்த்து வருகிறார். எல்லா சந்திப்புகளையும் அவர் ரத்து செய்து விட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி வழியாக பேசி சரி செய்ய முடியாத பிரச்சினைகளில் தீர்வு காண தேவைப்படுகிறபோது மட்டுமே அவர் தனது அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசிக்கிறார்.

இது குறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “மந்திரி வீட்டில் இருக்கிறார். அவரது அமைச்சக அதிகாரிகள் மட்டும் உடன் இருக்கிறார்கள். தவிர்க்க முடியாத தேவையின்போது மட்டுமே மூத்த அதிகாரிகள் சந்திக்கிறார்கள். மற்றபடி அனைவரும் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பாகவே கடந்த செவ்வாய்க்கிழமையன்று, தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம், நாக்பூருக்கு சென்று விட்டார்.

அவர் வீட்டுக்குள் இருந்து கொண்டே காணொலி காட்சி வழியாகவே கூட்டங்களை நடத்துகிறார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அவருக்கு நெருக்கமான மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “மந்திரி எப்போது திரும்பவும் டெல்லிக்கு வருவார் என்பது தெரியாது. விமானங்கள் ரத்தாகி விட்டன. அவர் தகவல் தொழில்நுட்ப வசதி காரணமாக கோப்புகளை பெறுகிறார். ஒப்புதல் அளிக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சமையல் கியாஸ் வினியோகத்தில் தடங்கல் ஏற்படாதவாறு பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கவனமாக பார்த்துக்கொண்டு வருகிறார்.

அவர் எரிபொருள் வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் தலைவர்களுடனும், அதன் தொடர்புடைய மற்றவர்களுடனும் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெரும்பாலும் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை செய்து வருகிறார். அவர் மத்திய மந்திரிசபை கூட்டத்தில்கூட கலந்துகொள்ள முடியவில்லை.

அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள், “மந்திரி நிர்மலா சீதாராமன் எல்லா வேலைகளையும் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி காணொலி காட்சி வழியாகவே செய்து வருகிறார்” என கூறுகின்றன.

பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை நாட்டு மக்கள் அப்படியே பின்பற்றுகிறார்களோ, இல்லையோ மத்திய மந்திரிகள் பலரும் பின்பற்றுகின்றனர். அவர்களில் பலரும் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Next Story