கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு: எதிர்க்கட்சி தலைவர்களுடன் மோடி 8-ந் தேதி ஆலோசனை
கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருகிற 8-ந் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்பை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். நாடாளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் இருக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் மோடி ஆலோசனை நடத்துகிறார். நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் அப்போது அவர் ஆலோசிப்பார் என்று தெரிகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து வெண்டிலேட்டர்கள், முக கவசங்கள், கிருமி நாசினிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்து உள்ளது.
நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படுவதை தடுப்பது போன்றவை குறித்த யோசனைகளை தெரிவிப்பதற்காக அதிகாரமிக்க 11 உயர்மட்ட குழுக்களை கடந்த ஞாயிற்றுக் கிழமை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுக்கள் எந்தெந்த துறைகளில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன? அவற்றை தீர்ப்பது எப்படி? என்பது குறித்து யோசனைகளை அரசுக்கு வழங்கும்.
இந்த உயர்மட்ட குழுவினருடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகள் எந்த அளவுக்கு தயார் நிலையில் உள்ளன? நோயாளிகளை பரிசோதனை செய்யும் வசதிகள், தனிமைப்படுத்தி வைக்க தேவையான படுக்கை வசதிகள் போதிய அளவில் உள்ளனவா? என்பது குறித்து அவர்களிடம் மோடி கேட்டு அறிந்தார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ சாதனங் கள், கையுறைகள், முககவசங் கள், பாதுகாப்பு உடைகள் போன்றவை தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன் மேற்கண்ட மருத்துவ சாதனங்களை நிறுவனங் கள் தேவையான அளவுக்கு உற்பத்தி செய்வதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story