2700 கி.மீ பயணம் செய்து 6 மாநிலங்களை கடந்து மருத்துவமனையில் இருந்த மகனை சந்தித்த தாயார்


2700 கி.மீ பயணம் செய்து 6 மாநிலங்களை கடந்து மருத்துவமனையில் இருந்த மகனை சந்தித்த தாயார்
x
தினத்தந்தி 17 April 2020 10:14 AM GMT (Updated: 17 April 2020 10:14 AM GMT)

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை காண 3 நாளில் 2,700 கி.மீ காரில் பயணம் செய்துள்ளார் தாயார் ஒருவர்.

ஜோத்பூர்

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் பி.எஸ்.எப்.,பில் பணி புரிந்து வருகிறார்.உடல்நிலை சரியில்லாமல் அவர் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனை கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மகனை காண செல்ல அவரது தாய் ஷீலாம்மா முடிவு செய்து கோட்டயம் கலெக்டரை நாடியுள்ளார்.

சம்பவத்தை கேட்டறிந்த கலெக்டர் சுதீர் பாபு தேவையான பாஸ்களை அளித்துள்ளார். தொடர்ந்து ஷீலாம்மா மற்றும் அவரது மருமகள் பார்வதி மற்றும் உறவினர் ஒருவருடன் காரில் கடந்த 11ம் திகதி புறப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம் குஜராத் மாநிலங்கள் வழியாக ராஜஸ்தானுக்கு கடந்த 14 ஆம் தேதி சென்று சேர்ந்துள்ளனர்.ஜோத்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை ஷீலாம்மா பார்த்துள்ளார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஷீலாம்மா கடவுளின் அருளால் எங்கும் எந்த வித பிரச்சினையும் இன்றி வந்து சேர்ந்தோம்.தற்போது தன் மகனின் உடல்நிலை தேறி வருவதாக வும், பயணத்திற்கு உதவி செய்த கோட்டயம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைவருக்கும் நன்றி கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆந்திராவில் சிக்கி தவித்து வந்த தன் மகனை அழைத்து வந்தார். சுமார் 1,400 கி.மீ.,தூரத்தை தன் இருசக்கர வாகனத்தில் அவர் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story